
எந்த அரசு தன்நலன் பேணாது தன் மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசோ அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும் என ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.
சென்னை மெரினாவில் நேற்று இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் காண ஏறத்தாழ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். கடும் வெயிலின் தாக்கமும் ஒருபுறம் இருந்தது. இதன் எதிரொலியாக 5 பேர் உயிரிழந்தார்கள். இதற்கு நிர்வாகக் குறைபாட்டைக் காரணம் காட்டி, எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.
"சென்னை மெரினா கடற்கரையொட்டிய வான்வெளியில் இந்திய விமானப்படை நடத்திய சாகச நிகழ்ச்சியைக் காண இலட்சக்கணக்கான மக்கள் கூடினர். அவர்களில் நூற்றுக் கணக்கானோர் மயக்கமுற்றனர் என்பதும் 5 பேர் உயிரிழந்திருப்பதும் மிகுந்த அதிர்ச்சி மற்றும் வேதனையளிக்கிறது. இப்பெருந்துயரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஆணையிடவேண்டுமென்றும்; உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்!
இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை விமானப்படையும் தமிழ்நாடு அரசும் இணைந்து மேற்கொண்டன. இது தொடர்பாக முன்கூட்டியே ஊடகங்களில் வெளியான செய்திகள் பொது மக்களை வெகுவாக ஈர்த்ததால் இலட்சக்கணக்கானவர்கள் மெரினா கடற்கரையில் கூடிவிட்டனர். இந்நிலையில் தான், ஐந்து பேர். பலியாகும் அவலம் நடந்துள்ளது. இந்த சாவுகள் கூட்ட நெரிசலால் (stampede) ஏற்படவில்லை. வெயிலின் தீவிரத்தால் உண்டான நீர்ச்சத்து குறைவு காரணமாகவே ஏற்பட்டிருக்கின்றன எனத் தெரிய வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
எனினும் வெயிலின் கொடுமையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது குறித்து இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். வெயிலின் கொடுமையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் குறைபாடுகள் ஏதும் இருந்ததா என்பதை விசாரித்து அதற்குப் பொறுப்பானவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு உயர்மட்ட விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்!" என்று திருமாவளவன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் எக்ஸ் தளப் பக்கத்தில் விமர்சனப் பதிவை முன்வைத்துள்ளார்.
"மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் ‘வான்படை சாகச’ கண்காட்சியை காண மக்கள் கூட்டம் இவ்வளவு வரும் என்று அரசு ஏன் முன்கூட்டியே கவனிக்க தவறியது.
கொளுத்தும் வெயிலில் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடும் பொழுது அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதன்காரணமாக உடலில் நீர்சத்து குறைந்து மயக்கம் ஏற்படும். சிலருக்கு மாரடைப்பும் ஏற்படும். இது அறிவியல் எதார்த்தம். இதையெல்லாம் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்த பிறகே அரசு இந்த நிகழ்விற்கு பொதுமக்களை அனுமதித்திருக்க வேண்டும்.
இந்த நிகழ்விலோ கூடிய லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு ஏற்ற வகையில் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தவில்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறையை அகற்ற போதிய இடவசதியை ஒருங்கு படுத்தவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முறையான முதல் உதவி சிகிச்சை மையங்களையும் ஏற்பாடு செய்யவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானதையும் காண முடிகிறது. அப்படி பாதிப்புக்கு உள்ளானவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் முடியாத நிலையில் போக்குவரத்து நெருக்கடியும் இருந்துள்ளது.
இவ்வளவு மக்கள் திரளும் போது மக்களை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன் ஏற்பாடுகளை தமிழக காவல் துறை, சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்டை துறையினர் போர்க்கால அடிப்படையில் முன் ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தாமல் போனதாலே இந்த உயிர் இழப்புகளும் நடந்துள்ளது.
அரசின் மூத்த நிர்வாகத்தினர் அனைவரும் வான்படை சாகச நிகழ்வை காணும் ஆர்வத்தில் மட்டுமே இருந்துள்ளனர். தேவையான அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க முடக்கிவிடவில்லை என்பதை மக்களின் குமுறலில் இருந்தே அறிய முடிகிறது.
எந்த அரசு தன்நலன் பேணாது தன் மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசோ அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும்.
அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது. அரசு இனிவரும் காலங்களிலாவது இது போன்ற நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும்!" என்று எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.