
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற வி.சி.சந்திரகுமாருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து எம்.எல்.ஏ.வாகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் சபாநாயகர் அப்பாவு.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை ஒட்டி பிப்.5-ல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சியில் இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், திமுக வேட்பாளராக வி.சி. சந்திரகுமாரும், நாதக வேட்பாளராக மா.கி. சீதாலட்சுமியும் போட்டியிட்டார்கள். பிப்.5-ல் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி கடந்த பிப்.8-ல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையில் முடிவில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 1,15,709 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாதக வேட்பாளர் உள்ளிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தார்கள். இதன் மூலம் முதல்முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வசமானது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இன்று (பிப்.10) காலை பதவியேற்றார் வி.சி. சந்திரகுமார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக கூட்டணி கட்சித் தலைவர்களான வைகோ, தொல். திருமாவளவன், ரா. முத்தரசன், பா. சண்முகம், செல்வப்பெருந்தகை, தி. வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.