ஆதவ் அர்ஜுனா கருத்தில் உடன்பாடு இல்லை: வன்னி அரசு

"2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தான் பயணிப்போம் என எங்களுடையத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்."
கோப்புப்படம்
கோப்புப்படம்படம்: https://x.com/VanniKural
2 min read

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுக கூட்டணி குறித்து கூறிய கருத்தில் உடன்பாடு இல்லை என மற்றொரு துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அண்மையில் ஊடகங்களில் அளித்து வரும் நேர்காணல் திமுக கூட்டணியில் சர்ச்சையாக வெடித்துள்ளன. திரைத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுகாலம் அனுபவம் கொண்ட எங்களுடையத் தலைவர் துணை முதல்வர் ஆக வேண்டும் என நாங்கள் விரும்புவதில் தவறில்லையே எனப் பேசியிருந்தார். வடமாநிலங்களில் திமுகவின் வெற்றிக்கு விசிகவின் வாக்குகள் காரணம் என்ற வகையில் ஒரு கருத்தைக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு ஆதவ் அர்ஜுனாவின் கருத்தில் உடன்பாடு இல்லை எனக் கூறினார்.

"திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளது. இடதுசாரிகள், மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவை திமுக கூட்டணியில் உள்ளன. பாஜக - ஆர்எஸ்எஸ் சங் பரிவார் அமைப்புகளை வீழ்த்த வேண்டும் என்பதற்காக 2021-ல் இந்தக் கட்சிகளெல்லாம் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தோம்.

வடமாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துக்கொண்டிருக்கும் பாஜக, தமிழ்நாட்டிலும் ஆட்சியைப் பிடித்தால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள். எனவே, அவர்களை வீழ்த்த வேண்டும் என்கிற ஒற்றைப் பொது நோக்கோடு கட்சித் தலைவர் திருமாவளவன் இந்தக் கூட்டணியில் இணைய முடிவு செய்தார். 6 தொகுதிகள் மட்டுமே கொடுத்திருந்தாலும், இடங்கள் முக்கியமல்ல இலக்குதான் முக்கியம் என்ற அடிப்படையில் கூட்டணியில் இணைந்தோம்.

அனைத்துக் கூட்டணிக் கட்சி வாக்குகளையும் பெற்றுதான் வெற்றி பெற்றுள்ளோம். அப்படி அனைத்துக் கட்சிகளின் வாக்குகளைப் பெற்றால் மட்டுமே வெற்றியும் பெற முடியும். இது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தக்கூடியது. கூட்டணியில் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வு மேற்கொண்டு வாக்குகளைப் பெற்றுள்ளோம்.

விசிக வெற்றியில் இடதுசாரிகள் பங்கு உள்ளது. திமுக வெற்றியில் விசிக, இடதுசாரிகள், மதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் பங்கு உள்ளது. அந்தந்த கட்சிகளின் வாக்குகள் அடிப்படையில் அவர்களுடையப் பங்களிப்பை நாங்கள் மதிக்கிறோம். எனவே, இந்த வெற்றியானது அனைவரும் இணைந்து பெற்ற வெற்றியாகவே பார்க்கிறோம்.

எங்களுடைய இலக்கு என்பது எங்களுடையக் கட்சியை அதிகாரத்துக்குக் கொண்டு வர வேண்டும், எங்களுடையத் தலைவர் முதல்வராக வேண்டும். இதற்காகதான் கட்சியை ஆரம்பித்துள்ளோம். இதன் அடிப்படையில்தான் இந்தக் கருத்து சொல்லப்பட்டுள்ளது. அவருடையக் (ஆதவ் அர்ஜுனா) கருத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும்.

விசிகவைப் பொறுத்தவரை தனி நபரை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம், ஆதரிக்க மாட்டோம். அது அவருடையத் தனிப்பட்ட கருத்து. விசிக இன்று திமுக தலைமையிலான கூட்டணியில்தான் தொடர்கிறோம். எங்களுடையத் தலைவர் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆதவ் அர்ஜுனனின் கருத்து ஏற்புடையதல்ல. அவர் தனிப்பட்ட முறையில் கருத்தைச் சொல்லியிருக்கலாம். ஆனால், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஒரு பொது நோக்கோடு நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு செயல்பட்டு, பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதில் நீங்கள் சொல்லும் எந்தக் கருத்தும் எங்களுக்கு ஏற்புடையதல்ல.

2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தான் பயணிப்போம் என எங்களுடையத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். அந்தக் கருத்துதான் எங்களுடையக் கருத்து" என்றார் வன்னி அரசு.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in