
சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு நீக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னையிலிருந்து நாகர்கோவில், மைசூரு, பெங்களூரு மற்றும் திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு வந்தே பாரத் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பயணிகளுக்கு உணவும் வழங்கப்படுவதுண்டு. முன்பதிவு செய்யும்போது உணவுக்கான விருப்பம் கேட்கப்படும். சைவம், அசைவம், நீரிழிவு நோயுள்ளவர்கள் எனப் பல்வேறு விருப்பங்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கும். பயணிகள் தங்களுக்கு விருப்பமான உணவு முறையைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
ஆனால், சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் விரைவு ரயிலில் அசைவ உணவு நீக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. டேவிட் மனோகர் எனும் பயணி இதுதொடர்புடைய புகாரை எக்ஸ் தளப் பக்கத்தில் எழுப்பியுள்ளார்.
"சென்னையிலிருந்து புறப்படும் நாகர்கோவில் வந்தே பாரத் விரைவு ரயிலில் முன்பதிவு செய்யும்போது அசைவ உணவுக்கான விருப்பத்தைத் தேர்வு செய்ய ஐஆர்சிடிசி அனுமதிக்கவில்லை. இது மோசமானது. மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு மட்டுமே அசைவ உணவு வழங்கப்படும் எனக் காண்பிக்கிறது" எனப் பதிவிட்டிருந்தார்.
ஐஆர்சிடிசி சார்பில் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளப் பக்கத்தில் இந்தப் பதிவின் கீழ் பதில் அளிக்கப்பட்டது. "முன்பதிவு செய்யும்போது சைவ உணவை மட்டுமே தேர்வு செய்ததாகக் காண்பிக்கிறது. இதே தேதியில் இதே ரயிலில் பலர் அசைவ உணவைத் தேர்வு செய்துள்ளார்கள்" என்று ஐஆர்சிடிசி விளக்கம் கொடுத்தது.
மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு மட்டுமே அசைவ உணவு அனுமதிக்கப்படும் என்று காட்டியதற்கான ஆதாரத்தை இந்தப் பயணி புகைப்படத்துடன் வெளியிட்டார்.
இதன்மூலம், வந்தே பாரத் ரயிலின் உணவுப் பட்டியலிலிருந்து அசை உணவு முன்னறிவிப்பின்றி நீக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ஐஆர்சிடிசி மூலம் சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் கிழக்கு நியூஸ் சார்பில் முன்பதிவு செய்ய முயற்சித்தபோது காலை, மதியம், இரவு என மூன்று நேரங்களிலும் அசைவ உணர்வைத் தேர்வு செய்வதற்கான விருப்பம் காண்பிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட பயணிக்கு அசைவ உணவு காண்பிக்காததற்கு தொழில்நுட்பப் பிரச்னை இருந்ததா அல்லது ரயில்வே சார்பில் ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. அதிகாரபூர்வ அறிவிப்பு இதுதொடர்பாக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.