அண்ணாமலை சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்: வானதி சீனிவாசன் | BJP | Vanathi Srinivasan |

கமல்ஹாசன் பேசுவதே ஒன்றுமே புரியாமல் இருப்பதால்தான் அவரை கோவை மக்கள் இங்கிருந்து அனுப்பி விட்டார்கள்...
வானதி சீனிவாசன் (கோப்புப்படம்)
வானதி சீனிவாசன் (கோப்புப்படம்)ANI
1 min read

அண்ணாமலை சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால் அதை முடிவு செய்யும் அதிகாரம் தில்லியில் இருக்கிறது என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள பாஜக சார்பில் 72 தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு விருகம்பாக்கம், சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய ஆறு தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

பொறுப்புகளிலிருந்து விலகிய அண்ணாமலை

ஆனால், கடந்த பிப்ரவரி 3 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ஆறு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக, கட்சி தலைமை நியமித்த தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோவை பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

வானதி சீனிவாசன் விளக்கம்

அவர் கூறியதாவது: “அண்ணாமலையின் தந்தைக்கு உடல்நலம் சரி இல்லை என்பதனால் தனது சுற்றுப் பயணத்தை மாற்றி அமைக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார். அவ்வளவுதான். உடனே இதைப் பூதாகரமாக ஆக்கி, பெரிய பிரச்னையாக மாற்றியிருக்கிறார்கள். இதற்குப் பின்னால் எதுவும் இல்லை. சகோதரர் அண்ணாமலை சடப்பேரவைக்குள் நுழைய வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். இதை நாங்கள் சொல்கிறோம். ஆனால் முடிவு செய்ய வேண்டிய அதிகாரம் தில்லியிடம் உள்ளது.

அதிமுக ஒன்றிணைந்து இருக்கிறது

முதிர்ந்த அரசியல்வாதியான செங்கோட்டையன் காலத்தின் கொடுமை காரணமாக இப்போது கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகரோடு சேர்ந்து நிற்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அதிமுகவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இணைந்திருக்கிறார்கள். வளமானதாக மாறிக் கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் வெற்றி என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

கமல் பேச்சு புரியவில்லை

நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் பேசியது ஒன்றுமே புரியவில்லை. அவர் பேசியது புரியாததால் தான் அவரை கோவை மக்கள் இருங்கிருந்து அனுப்பிவிட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிட மாடல் ஆட்சி தோல்வி அடைந்துவிட்டது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்.” என்றார்.

Summary

BJP MLA Vanathi Srinivasan said, "Our wish is for Annamalai to enter the Legislative Assembly. But the power to decide on that lies with Delhi.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in