தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன்: வைகோ பிரியாவிடை உரை! | Vaiko
தமிழீழ விடுதலைக்காகத் தன் வாளை உயர்த்துவேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் தனது பிரியாவிடை உரையில் கூறினார்.
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான திமுகவைச் சேர்ந்த பி. வில்சன், சண்முகம், எம்.எம். அப்துல்லா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுகவைச் சேர்ந்த சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடைய பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இவர்களில் திமுகவைச் சேர்ந்த பி. வில்சன் திமுக சார்பில் போட்டியிட்டு மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வாகியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திமுக சார்பில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல் ஹாசன் போட்டியிட்டு தேர்வாகியுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், வைகோ தனது பிரியாவிடை உரையை இன்று நிகழ்த்தினார்.
அவர் பேசியதாவது:
"துணைத் தலைவர் அவர்களே, எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பெருமை மிக்க அவையின் பணிக்காலம் நிறைவடைந்த நிலையில் உங்களிடமிருந்து விடைபெற எனக்கு வாய்ப்பளித்த இங்குள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.
என் மீது எப்போதும் பாசத்தையும், மரியாதையையும் காட்டிய முன்னாள் அவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. அவர் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.
1978, 1984 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் இந்த பெருமைமிகு அவைக்கு என்னை தேர்ந்தெடுத்து அனுப்பிய மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு என் நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகின்றேன்.
2019-ஆம் ஆண்டில் இந்த மேலவைக்கு என்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பியதற்காக, திராவிட மாடல் அரசாங்கத்தை நடத்தி வரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவில் முன்பு நாடாளுமன்றக் கட்சித் தலைவராக இருந்த முரசொலி மாறன் அவர்களால் வார்ப்பிக்கப்பட்டவன் நான்.
அவை துணைத் தலைவர் அவர்களே, நான் மேற்கொண்ட முயற்சியால், நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அப்போதைய பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களால் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈழத் தமிழர்களின் துயரம் மற்றும் சிங்கள அரசாங்கத்தால் கொடூரமாக இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் குறித்து 13 முறை கவன ஈர்ப்புத் தீர்மானத்தை இந்த அவையில் கொண்டுவந்து உரையாற்றியிருக்கிறேன். இதன் தொடர்ச்சியாக 19 மாதங்கள் 'பொடா' சட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் நான்தான். ‘மிசா' சட்டத்தின் கீழ் 12 மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டேன்.
பொடா சட்டத்தின் கீழ், எனது உணர்வுகளையும். நிகழ்வுகளையும் ‘சிறையில் விரிந்த மடல்கள் (From the portals of Prison)' என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக எழுதினேன். இந்நூல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் செப்டம்பர் 3, 2004 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
அவை துணைத் தலைவர் அவர்களே, ஜான் பிரிட்டாஸ் மற்றும் பேராசிரியர் மனோஜ் குமார் ஜா என் மீது பொழிந்த அன்பையும் பாசத்தையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது. எங்கள் மூவரையும் மூன்று துப்பாக்கி வீரர்கள் (மஸ்கடியர்ஸ்) அழைத்தார்கள். இந்த சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் அன்பையும் நட்பையும் இந்த பணிக்காலம் நிறைவடைந்த நிலையில் இழக்கிறேன் என்று நினைக்கின்ற போது மனம் வேதனைப் படுகிறது.
அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோது, இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் நவரத்தின விருது பெற்ற இலாபம் ஈட்டக் கூடிய நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் பங்குகளை விற்பனை செய்ய ஒன்றிய அரசு தீர்மானித்தது. நான் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து, 25 தொழிற்சங்கங்களின் வேண்டுகோள் மனுவை அளித்தேன். என்.எல்.சி எனது தமிழ்நாட்டில் உள்ளது என்று நான் அவரிடம் கூறினேன். 25,000 தொழிலாளர்கள் இந்த தொழிற் நிறுவனத்தில் வியர்வை சிந்தி உழைத்து வருகின்றார்கள். எனவே இதை தனியார்மயமாக்கக் கூடாது என்று வாதாடினேன். ஏற்கனவே காபினெட் அமைச்சரவை என்.எல்.சி., நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. இரண்டு அல்லது மூன்று நாள்களில் இது தனியார்மயமாக்கப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் அவர்கள் கூறினார்.
மத்தியப் பிரதேசத்தில் ஒரு நிகழ்வில், மக்களிடையே “வைகோ எனது வளர்ப்பு மகன்” என்று நீங்கள் கூறினீர்கள். நான் பிறந்த தமிழ்நாட்டிற்கு நான் ஏதாவது செய்ய வேண்டாமா? இந்த முடிவை தயவுசெய்து திரும்பப் பெறுமாறு நான் உங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். பிரதமர் வாஜ்பாய் அவர்கள் வழக்கம் போல், கண்களை மூடிக்கொண்டு ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, “என்.எல்.சி தனியார்மயமாக்கப்படக் கூடாது என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். என்.எல்.சி. தனியார் மயமாக்கப்படாது” என்று உறுதி கூறினார். பிரதமரின் இல்லத்திலிருந்து ‘இந்து' ஆங்கில செய்தித்தாளுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தேன்; அது மறுநாள் காலை ‘இந்து' நாளேடு முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
தமிழக முதல்வராக பேரறிஞர் அண்ணா இருந்தபோது, சட்டப்பேரவையில், “மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஏற்க மாட்டோம், தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே எங்கள் இருமொழிக் கொள்கையாக இருக்கும்” என்று அறிவித்தார்.
இன்று கர்நாடகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்க அரசுகள் தமிழ்நாட்டின் மொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றன என்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
சகோதரி மம்தா அம்மையார் அவர்களை என்னால் ஒருபோதும் மறக்க இயலாது. ஒரு நாள், பிற்பகல் நேரத்தில் பேசவிருந்த அவர், என்னை நோக்கி விரைந்து வந்து, என் கருப்பு சால்வையை கேட்டு வாங்கி, “இன்று நான் பல எம்.பி.க்களுடன் போராட வேண்டும், இந்த சால்வை எனக்கு மன உறுதியையும் துணிவையும் தரும்” என்று கூறினார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, சகோதரி மம்தா பானர்ஜி அவர்கள் “இந்தி திணிப்பு என்பது மொழியியல் பயங்கரவாதம்” என்று கூறியுள்ளார். எனக்கு ஒத்துழைப்பு அளித்த நாடாளுமன்ற செயலாளர் மற்றும் அவரது அனைத்து குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கவிஞர் லாங் ஃபெல்லோ அவர்களின் கவிதையை இந்த அவையின் இளம் உறுப்பினர்களிடம், மேற்கோள் காட்ட விரும்புகின்றேன். வரலாறு படைத்த மனிதர்கள் அடைந்த உயரங்கள், திடீர் விமான பயணத்தால் ஏற்பட்டது அல்ல, அவர்களின் சக தோழர்கள் தூங்கும்போது, இவர்கள் இரவில் உழைத்துக் கொண்டிருந்தார்கள். எனவே, நீங்கள் கடுமையாக இரவு பகல் பாராது கண் துஞ்சாது உழைக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
1963 ஏப்ரலில் இந்த பெருமைமிகு அவையில் மாபெரும் தமிழ்த் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் கன்னிப் பேச்சிலிருந்து சிலவற்றை மேற்கோள் காட்டுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்:
அவர் தனது கன்னிப் பேச்சில், “நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் திராவிடர்கள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் வழங்க உறுதியான, தனித்துவமான, வித்தியாசமான ஒன்றைப் பெற்றுள்ளனர் என்று நான் கருதுகிறேன். எனவேதான் நாங்கள் சுயநிர்ணய உரிமையைப் பெற விரும்புகிறோம்”. அவர் மேலும் கூறுகிறார்: “எதிர்காலங்களில், ஒரு புதிய பாராட்டு உணர்வு ஏற்படும், தெற்கின் தேவைகள் மற்றும் கோட்பாடுகள் நன்கு புரிந்து கொள்ளப்படும், மேலும் எனது பெருமைக்குரிய திராவிட நாட்டிற்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்படும்” என்றார்.
நமது மனித வாழ்க்கையில், நாம் தோல்வி, ஏமாற்றம் மற்றும் துரோகங்களை எதிர்கொள்ளலாம், ஆனால் அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை.
1576 இல் ஹால்திகாட்டி போரின் தோல்விக்குப் பிறகு, மகா ராணா பிரதாப் சிங் பற்றிய அந்த பழங்கால மேற்கோளை நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
காய்ந்த ரொட்டிகள் கிடைக்கும் அந்த நேரம் வரை, ஓடைகளில் தண்ணீர் கிடைக்கும் அந்த நேரம் வரை, நான் வளிமண்டலத்தின் காற்றை சுவாசிக்கும் அந்த நேரம் வரை, என் சொந்த நிலத்திற்காக என் வாளை உயர்த்துவேன்.
இப்போது, நான் ஒருபோதும் அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன், தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன்" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார் வைகோ.
Vaiko | Rajya Sabha | Rajya Sabha Members | Vaiko's Farewell Speech |