
கரூரில் நடந்த பேரவலத்திற்கு தமிழக வெற்றிக் கழகம்தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது:-
”தமிழக வரலாற்றிலேயே நடைபெறாத கொடுந்துயர், பேரவலம் கரூரில் நடைபெற்றுள்ளது. அதில் இதுவரை மடிந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உள்ளது. பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கு வருகிற கூட்டத்தை ஒழுங்குபடுத்த, தங்கள் இயக்கத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். எங்கே ஒரு துயரம் ஏற்பட்டாலும் தமிழ்நாட்டில் 8 மணி நேரத்திற்குள்ளாக அவ்விடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்த்தவன் நான். எனக்கு உடல்நலம் மிகவும் மோசமாக போனதால் மருத்துவர்கள யோசனைப்படி வீட்டிலேயே சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதால் நான் கரூருக்கு உடனே விரைந்து செல்லவில்லை.
கரூர் சம்பவத்தில் பொறுப்பேற்க வேண்டியது தமிழக வெற்றிக் கழகம்தான். காலை 10:30 மணிக்கு கரூரில் விஜய் பேசுவார் என்று சொன்னார்கள். அவர், இரவு 7 மணிக்குத்தான் கரூர் எல்லைக்கே போகிறார். கூட்டத்தின் தன்மையைப் பார்த்து அதைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு யாருக்கு? சாலையில் எளிதில் திரும்பக்கூட முடியாத அளவிற்கு நீண்ட வாகனத்தில் செல்கிறார். அவருக்குப் பின்னால் கூட்டம் முண்டியடித்து வருகிறது. ஒரு நிகழ்ச்சி நடந்தால் முடியும் வரை பதற்றம் இருக்க வேண்டும். காயம் ஏற்பட்டால் உதவ வேண்டும் என்ற பதற்றம் இருக்க வேண்டும். ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கூட்டத்தினர் தண்ணீர் பாட்டிலுக்கு ஏங்கும் போது தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசுகிறார். மின்சாரம் தடைப்பட்டுவிட்டது என்று குற்றம் சாட்டுகிறார். திட்டமிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் தமிழக அரசு மீதும், சட்டமன்ற உறுப்பினர் மீதும், மறைமுகமாக முதலமைச்சரின் மீதும் தாக்குதல்களைத் தொடுக்க ஆரம்பித்துள்ளனர். சி.பி.ஐ விசாரணை வந்தால் அவர்கள் நடுநிலையாக அறிக்கை தந்து விடுவார்களா? சி.பி.ஐ இயக்குவது மோடி அரசுதானே? சி.பி.ஐ மீது எனக்கு நம்பிக்கை கிடையாது.
இவ்வளவு கூட்டம் கூடுவது தெரிந்தும் தாமதமாகப் புறப்பட்டது ஏன்? முதலமைச்சர் மின்னல் வேகத்தில் சென்று இருக்கிறார். இதைவிட முதலமைச்சர் என்ன செய்ய வேண்டும். புரட்சி வர வேண்டும், புரட்சி வெடிக்க வேண்டும் என அக்கட்சியின் முன்னிலையில் இருப்பவர் பதிவு போடுகிறார். எதிர்ப்பு வர இப்போது அந்தப் பதிவை எடுத்திருக்கிறார். ஆம்புலன்ஸ், மருத்துவ வசதி என ஆயத்தமாக இருந்ததை குற்றம் சாட்டுகிறார்கள். ஆயத்தமாக இல்லாவிட்டால் என்ன கூறியிருப்பார்கள்? முதலமைச்சரை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக தாக்குவதை போலவும், ஆட்சியாளர்களை பொறுப்பாளியாக்க முயற்சிப்பதை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த துயரத்திற்கு பொறுப்பு ஏற்க வேண்டியது தமிழக வெற்றிக் கழகம் தான்.
பாஜக சந்தடி சாக்கில் நுழைந்துவிடலாம் என நினைக்கிறார்கள். விஜயைக் கைது செய்யக் கூடாது. விசாரிக்கலாம். நான் அறிந்த அரை அரசிடம் அப்படி ஒரு திட்டம் இல்லை. விஜய் தொண்டர் அணியை உருவாக்க வேண்டும். இளைஞர்கள் வருகை இருப்பதால் அவர் தான் பொறுப்பு ஏற்றுக் கொண்டு தொண்டர் அணியை உருவாக்க வேண்டியது கட்டாயம். ஒரு நபர் ஆணையம் சரியானதுதான்” இவ்வாறு அவர் பேசினார்.