
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோயிலில் நள்ளிரவு 12 மணி வரை தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க 2025-ஐ அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றுள்ளார்கள். ஒருபுறம் சுற்றுலாத் தலங்களிலும், கடற்கரைகளிலும், விடுதிகளிலும் கூட்டம் அலை மோதினால், மறுபுறம் வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூடியுள்ளார்கள்.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். கோயில் வளாகத்துக்கு வெளியே நீண்ட வரிசை இருந்தாலும், பக்தர்கள் மிகுந்த பொறுமையுடன் வரிசையில் நின்றபடி தரிசனம் செய்து வருகிறார்கள்.
வடபழனி முருகன் கோயிலில் நண்பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இன்று அலை கடலென பக்தர்கள் திரண்டுள்ளதால், நண்பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நள்ளிரவு 12 மணி வரை வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வடபழனி முருகன் கோயிலில் இன்று வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடபழனி கோயிலில், முருகன் தங்கக் காசு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார்.