குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான காலிப் பணியிடங்களில் கூடுதலாக 213 பணியிடங்களை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், வனக் காவலர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர்கள், இந்து சமய அறநிலையத்துறை தணிக்கை ஆய்வாளர், கூட்டுறவு மூத்த ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள 2,327 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு கடந்த ஜூன் 20-ல் வெளியானது.
தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 19 வரை பெறப்பட்டன. இந்தத் தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து 7.93 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து செப்.14-ல் நடந்த முதல்நிலைத் தேர்வில் சுமார் 5.81 லட்சம் தேர்வர்கள் கலந்துகொண்டனர் என தகவல் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி.
இந்நிலையில், குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்களில் 213 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக நேற்று (நவ.8) அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து இந்தத் தேர்வின் மூலம் நிரப்பப்படும் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2540 ஆக அதிகரித்துள்ளது. முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வரும் டிசம்பரில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வரும் பிப்ரவரில் முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படும். இதேபோல சில நாட்களுக்கு முன்பு குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களும் அதிகரிக்கப்பட்டன.