
இஸ்ரோ தலைவராகவும், மத்திய விண்வெளித்துறை செயலராகவும் தமிழகத்தைச் சேர்ந்த வி. நாராயணன் இன்று (ஜன.14) பொறுப்பேற்றார்.
கடந்த ஜன.7-ல் கூடிய நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு வழங்கிய ஒப்புதலின் அடிப்படையில், இஸ்ரோவின் 11-வது தலைவராகவும், மத்திய விண்வெளித்துறை செயலராகவும் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் வி. நாராயணன்.
இதன் மூலம், கே. சிவனுக்குப் பிறகு இஸ்ரோவின் தலைவராகப் பொறுப்பேற்ற இரண்டாவது தமிழர் என்கிற பெருமையைப் பெற்றார். இந்நிகழ்வில், ஓய்வுபெற்ற இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் உடனிருந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், மேலக்காட்டுவிளையைச் சேர்ந்த வி. நாராயணன் கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு 1984-ல் இஸ்ரோ பணியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, பணியில் இருந்தபோதே ஐஐடி கரக்பூரில், ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான கிரையோஜெனிக் என்ஜினியரிங்கில் எம்.டெக். பட்டம் பெற்ற நாராயணன், 2001-ல் ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங்கில் முனைவர் பட்டம் பெற்றார்.
ஆரம்ப காலகட்டத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஒலி ராக்கெட்டுகள், மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவுதளம் மற்றும் துருவ செயற்கைக்கோள் ஏவுதளம் ஆகியவற்றின் திட உந்துவிசை தொடர்பாக அவர் பணியாற்றினார்.
41 ஆண்டு காலம் இஸ்ரோவின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ள நாராயணன், ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை அமைப்புகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.
சந்திரயான் 2, சந்திரயான் 3, சூரிய ஆய்வுக்கான ஆதித்யா எல்-1, ஜிஎஸ்எல்வி எம்கே-3 ராக்கெட் போன்ற இஸ்ரோவின் முக்கியத் திட்டங்களில் அவர் பங்காற்றியுள்ளார். கடைசியாக, திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்துவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.
இஸ்ரோ தலைவராக அடுத்த 2 ஆண்டு காலம் பணியாற்றுவார் நாராயணன்.