
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அரசால் விதிக்கப்பட்டுள்ள 50% வரியால், தமிழகத்தின் ஜவுளி மையமான திருப்பூரில் ரூ. 3,000 கோடி அளவுக்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு விதித்துள்ள வரியால், ஆயத்த ஆடை வர்த்தகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 68% பங்களிப்பை திருப்பூர் வகித்து வருகிறது.
குறிப்பாக, திருப்பூரில் ஆண்டுக்கு ரூ. 45 ஆயிரம் கோடிக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் அமெரிக்காவுக்கு மட்டும் ரூ. 12 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.
நேற்றுக்கு (ஆக. 27) அமலுக்கு வந்த வரி விதிப்பால் திருப்பூரில் இருந்து மேற்கொள்ளப்படும் ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் முதற்கட்டமாக ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் இன்று (ஆக. 28) வெளியிட்ட பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது,
`அமெரிக்காவின் வரி 50% ஆக உயர்த்தப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் ஏற்றுமதியை கடுமையாகப் பாதித்துள்ளது, குறிப்பாக ஜவுளி மையமான திருப்பூரில் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட ரூ. 3,000 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பணியிடங்கள் ஆபத்தில் உள்ளன.
நமது தொழில்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடி நிவாரணத்தையும், கட்டமைப்பு சீர்திருத்தங்களையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்’ என்றார்.