
திருநெல்வேலியிலும், கும்பகோணத்திலும் இன்று (நவ.22) நடைபெற்ற அதிமுக ஆய்வுக்கூட்டங்களில் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டன.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று (நவ.22) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடந்த இந்த் ஆய்வுக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் துணை பொதுச்செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய பாப்புலர் முத்தையா, மாவட்டச் செயலாளர் தரப்பு முறையாக பணி செய்யவில்லை என குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து பாப்புலர் முத்தையாவுடன் மாவட்டச் செயலாளரின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து மேடைக்கு கீழே இருந்த இருதரப்பு ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதனை அடுத்து தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் வகையில் பேசி, பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்தார் எஸ்.பி. வேலுமணி.
மேலும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இன்று நடந்த அதிமுக ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர். காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கள ஆய்வுக் கூட்டத்தில் பேச முயன்ற திண்டுக்கல் சீனிவாசனை மறித்து கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து தொண்டர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என உள்ளூர் பொறுப்பாளர் ஒருவர் மேடையேறி கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து சம்மந்தப்பட்ட தொண்டரை சமாதானப்படுத்தி கட்சி உறுப்பினர்கள் அமர வைத்தனர்.