மதுரையில் ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் 70 வருடங்களுக்குப் பிறகு நேற்று (அக்.25) ஒரு நாளில் 100 மி.மீ கனமழை பெய்தது. இதனை அடுத்து மதுரை நகரின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் கடுமையான வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக செல்லூர் பகுதியின் ஆஸாத் தெரு, கட்டபொம்மன் நகர், சரஸ்வதி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
கனமழையால் மழை நீர் செல்லும் கண்மாய் நிரம்பி, செல்லூர் ஓடை கால்வாய் வழியாக வெள்ள நீர் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துள்ளது. இவ்வாறு வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதனால் பல இடங்களில் உணவு கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.
பாதாள சாக்கடை திட்டத்தை சரிவர செயல்படுத்தாதும், வெள்ள நீர் வெளியேறாத வகையில் பி.பி. குளம் வாய்க்கால் அடைக்கப்பட்டிருப்பதும் இந்த பிரச்னைக்கான முக்கிய காரணங்களாக புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் செல்லூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், `மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மிக குறுகிய நேரத்தில் நேற்று (அக்.26) கனமழை பெய்துள்ளது. 109 கண்மாய்களின் நீர் செல்லூர் கண்மாய்க்கு வந்து, அங்கிருந்து பந்தல்குடி வாய்க்கால் மூலம் வைகை ஆற்றுக்கு செல்லும். ஆனால் அதீத அளவில் பெய்த மழையால் தாழ்வாக இருக்கும் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
போர்க்கால அடிப்படையில் இரவோடு இரவாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சில இடங்களில் நிலைமையை சீரடைந்துள்ளது. இன்று மதியத்துக்குள் நிலைமையை முழுமையாக சீரமைக்க வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றார்.