தமிழர்களுக்கு எதிரான கருத்து: மன்னிப்புக் கோரிய மத்திய அமைச்சர் ஷோபா
ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களைத் தொடர்புபடுத்தி முன்பு தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே.
கடந்த மார்ச் 1-ல் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பையில் இருந்த குண்டு பிற்பகல் 12.55 அளவில் வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் சுமார் 8 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர்தான் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டு வைத்தார் என செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்தார். இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் ஷோபாவின் கருத்துக்குக் கண்டனத்தைத் தெரிவித்தார். இதற்குப் பிறகு தன் எக்ஸ் கணக்கில், தமிழர்களுக்கு எதிராகத் முன்பு தான் கூறிய கருத்தைத் திரும்பப் பெறுவதாகக் கூறி தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்பதாகப் பதிவிட்டார் ஷோபா.
மேலும் இரு தரப்புக்கும் இடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மத்திய இணையமைச்சர் ஷோபா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ஷோபா.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் ஷோபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே தன் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் ஷோபா மன்னிப்புக் கேட்டதாகத் தெரிவித்தார்.
மேலும் தன் கருத்துக்கு தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஷோபா சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதை அடுத்து இந்த வழக்கு மீதான விசாரணையை செப்.05-க்கு ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.