
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரி முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 கடைசி நாள். தில்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு கூடியது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, "நாங்கள் எதிர்க்கட்சிகளிடம் பேசவுள்ளோம். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெறுவதை உறுதி செய்ய அவர்களுடைய ஆதரவையும் கோரவுள்ளோம்" என்றார்.
இந்நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை அலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார். முதல்வர் ஸ்டாலினிடம் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அழைத்தும் ராஜ்நாத் சிங் ஆதரவு கோரியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் சென்னை வந்திருந்த சி.பி. ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்திருந்தார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கவனிக்கத்தக்கது. திமுக ஆதரவாளர்கள் இணையத்தில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவைத் தராது என்ற வகையிலேயே பதிவுகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
இண்டியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. எனவே, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இண்டியா கூட்டணி வேட்பாளருக்கே இருக்கும் எனத் தெரிகிறது.
Vice President Election | CP Radhakrishnan | NDA | INDIA Bloc | INDIA | MK Stalin | Rajnath Singh | Vice President |