
மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் புதிதாக 5 விமான நிலையங்களில் உருவாகி வருவதாக தகவல் தெரிவித்துள்ளார் மத்திய விமானப் போக்குவரத்து இணையமைச்சர்.
உடான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள விமான நிலையங்கள் குறித்தும், விமான ஒடுபாதைகள் குறித்தும் திமுக மாநிலங்களவை எம்.பி. என்.வி.என். கனிமோழி சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.
எம்.பி.யின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய விமானப் போக்குவரத்து இணையமைச்சர் முரளிதர் மோஹோல் அளித்த பதில்கள்,
`உடான் (பிராந்திய இணைப்பு) திட்டத்தின் கீழ் சேலம், வேலூர், நெய்வேலி, தஞ்சாவூர், ராமநாதபுரம் என தமிழ்நாட்டில் ஐந்து விமான நிலையங்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. இவற்றில், சேலம் விமான நிலையத்தில் இருந்து ஏற்கனவே விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
நெய்வேலி மற்றும் வேலூர் விமான நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று அவற்றுக்கான உரிமம் பெறும் பணி நடைபெற்று வருகின்றது. ராமநாதபுரம் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. தஞ்சாவூரில் விமான நிலைய அணுகு சாலைக்கான இடம் கிடைத்ததும் கட்டுமானப் பணிகள் தொடங்கும்.
அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், சூலூர் மற்றும் உளுந்தூர்பேட்டையில் உள்ள பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுபாதைகள் உடான் திட்டத்தின் கீழ் ஏலத்திற்கு தயாராக உள்ளன’ என்றார்.