சாம்சங் போராட்டத்தில் விரைந்து தீர்வு காண்க: மத்திய அமைச்சர் மாண்டவியா

சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரிந்துவரும் முழுநேர ஊழியர்களுக்கு இந்தப் பகுதியில் உள்ள பிற தொழிற்சாலைகளில் வழங்குவதைவிட 1.8 மடங்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது
சாம்சங் போராட்டத்தில் விரைந்து தீர்வு காண்க: மத்திய அமைச்சர் மாண்டவியா
1 min read

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டத்தில் விரைந்து தீர்வு காணுமாறு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உற்பத்தி சூழலை சாதகமான முறையில் தக்கவைக்கும் நோக்கில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டத்தில் இணக்கமான ஒரு தீர்வை விரைந்து எடுக்கும்படியும், இந்த விவகாரத்தில் உரிய தீர்வை எட்ட தன் அமைச்சகத்தின் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும், முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மத்திய அமைச்சர் மாண்டவியா.

ஸ்ரீ பெரும்புதூருக்கு அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கடந்த செப்.9-ல் தொடங்கி ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின் உதவியுடன் போராட்டம் நடத்தி வரும் ஊழியர்கள் தரப்புடன் இருமுறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது சாம்சங் தொழிற்சாலை நிர்வாகம். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை.

`ஊழியர்களின் நலனுக்கு சாம்சங் நிறுவனம் முன்னுரிமை அளித்துவருகிறது. ஸ்ரீ பெரும்புதூர் சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரிந்துவரும் முழுநேர ஊழியர்களுக்கு இந்தப் பகுதியில் உள்ள பிற தொழிற்சாலைகளில் வழங்குவதைவிட 1.8 மடங்கு அதிகமாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஊழியர்களின் குறைகளை தீர்ப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று ஊழியர்கள் போராட்டம் குறித்து நேற்று (செப்.24) அறிக்கை வெளியிட்டது சாம்சங் தொழிற்சாலை நிர்வாகம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in