திருப்பரங்குன்ற விவகாரத்தை சிவன் பார்த்துக் கொள்வார்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் | Thiruparankundram |

தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் தேசிய கல்விக் கொள்கையைத் திமுக அரசு ஆமோதிக்கும் என நம்புகிறேன்...
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் (கோப்புப்படம்)
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் (கோப்புப்படம்)ANI
2 min read

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதைத் தடுக்க நினைப்பவர்களைச் சிவபெருமான் பார்த்துக் கொள்வார் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

மத்திய அரசு நடத்திய காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியின் நிறைவு விழா நேற்று (டிச. 30) ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து மதுரையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் அதனைச் செயல்படுத்தாமல் இருப்பது நியாயமற்றது. இதன் பின்னால் இருக்கும் அரசியல் நோக்கத்தை கவனிக்க வேண்டும். இந்த துரதிர்ஷ்ட வசமான நிகழ்ச்சியை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிவபெருமான் பார்த்துக் கொள்வார்

இதில் நீதிபதி பதவி விலக வேண்டும் என்று ஏன் கூறுகிறார்கள்? ராமநாதசுவாமி, மீனாட்சி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களின் இருப்பைச் சந்தேகிக்க முடியுமா? தமிழ் இலக்கியத்தில் இருந்தும் பாரம்பரியத்தில் இருந்தும் இவர்களைப் பிரித்துவிட முடியுமா? தமிழ்ச் சமூகத்தில் இருந்து திருக்குறளை விலக்கிவிட முடியுமா? இத்தகைய கருத்துகளை வெளியிடுபவர்கள் தவறாகப் புரிந்து கொண்டவர்கள். முட்டாள்கள். அவர்களை சிவபெருமான் பார்த்து மன்னித்து அருளட்டும்.

காசி தமிழ்ச் சங்கமம் நிறைவு

காசி தமிழ்ச் சங்கமத்தின் நான்காம் ஆண்டு நிகழ்வு நேற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றது. ராமேஸ்வரத்தில் நேற்று நடந்த நிறைவு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார். காசி தமிழ்ச் சங்கமம் என்பது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடையில் இருக்கும் இணைப்பை நிறுவுவது. குறிப்பாக காசி மற்றும் ராமேஸ்வரத்தை இணைக்கும் பாலமாகும். இப்போது காசி தமிழ்ச் சங்கமத்தில் பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். வருங்காலத்தில் நாடு முழுவதும் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தலைப்பிலான கலாசார இணைப்பு விழாக்கள் நடைபெறும்.

தாய்மொழிக் கல்வி அவசியம்

இப்போது மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கைத் திட்டத்தைச் செயலாக்கி வருகிறது. அதன் முக்கிய அம்சமே நம் நாட்டின் மாநிலங்கள் தங்கள் தாய்மொழியைக் கற்பிக்க வேண்டும் என்பது. தமிழ்நாட்டில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். இதைத்தான் தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு, தமிழ் மொழியை வளர்க்கும் இந்தத் திட்டத்தை ஆமோதிக்கும் என நம்புகிறேன். தேசிய கல்விக் கொள்கை நாளைய தலைவர்களாக விளங்கும் இன்றைய மாணவர்களின் சிந்தனை மற்றும் செயல்களைத் தாய் மொழியின் வழியாக நிறைவேற்ற உதவும்” என்றார்.

Summary

Union Minister Dharmendra Pradhan said that Lord Shiva will take care of those who try to prevent the lighting of the lamp at Thiruparankundram.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in