ரயில்வே திட்டங்களின் தாமதத்திற்கு மாநில அரசே காரணம்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு | Ashwini Vaishnaw |

தமிழ்நாட்டு மக்களுக்கு விரைவான உட்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்குவதில் மத்திய அரசு தயாராகவும் உறுதியுடனும் இருக்கிறது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (கோப்புப்படம்)
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (கோப்புப்படம்)
2 min read

மாநில அரசின் ஒத்துழைப்பு இன்மையே மத்திய அரசு திட்டங்கள் தாமதம் ஆவதற்கான காரணம் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதியை விரைந்து ஒதுக்கக் கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பல்வேறு ரயில்வே திட்டங்கள் நிலுவையில் உள்ள நிலையில், நிதிநிலை அறிக்கையில் குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து எழுதியிருந்தார். இதனையடுத்து, முதலமைச்சரின் பதிவுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் பதிவு

“இந்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. 2014 முதல் மாநிலத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 8.5%-க்கும் மேல் அதிகரித்து, 2026–27 -ல் ரூ. 7,611 கோடியை எட்டியுள்ளது. இருப்பினும், ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி ஏற்படாது. நடந்து கொண்டிருக்கும் ரயில்வே திட்டங்களுக்கு, தேவையான நிலத்தில் 24% மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், நிலம் கையகப்படுத்துதலுக்காக ரூ. 1,465 கோடி ஏற்கெனவே தமிழ்நாடு அரசுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. இதுபோன்ற பல்வேறு முக்கிய திட்டங்கள், மாநில அரசின் நிலம் கையகப்படுத்துதல் நிலுவையில் உள்ளதாலேயே தாமதமாகின்றன.

மாநில அரசிடமிருந்து ஒத்துழைப்பு இல்லை

நிதி இல்லாததால் திட்டங்கள் நிறுத்தப்படுவதில்லை. அத்தகைய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. நிலம் கையகப்படுத்துதலே பல திட்டங்களின் தாமதத்திற்கு முக்கிய காரணம். மதுரை - தூத்துக்குடி (அருப்புக்கோட்டை வழி) ரயில் பாதைக்கு 91% மற்றும் திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை ரயில் பாதையில் 86% நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. 2019-ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு மாநில அரசிடமிருந்து முறையான ஒத்துழைப்பு இல்லாததால் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்படவே இல்லை.

விரைந்து மின்மயமாகும் தெற்கு ரயில்வே

இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் மத்திய அரசு பல புதிய ரயில் பாதைகள், இரட்டைப் பாதைகளை அனுமதித்துள்ளது. மேலும், பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில் திறன் விரிவாக்கத்திற்கான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மறுவடிவமைப்பாக மொத்தம் 77 அம்ரித் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 18 ரயில் நிலையங்களுக்கான பணிகள் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளன. 2014-ல் இருந்து சுமார் 1,350 கி.மீட்டர் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.2,386 கி.மீட்டர் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் உறுதி

இந்தியாவில் தயாரிக்கப்படும் நவீன ரயில்களான வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு மேம்பட்ட மற்றும் மலிவு விலையில் பயணத்தை உறுதி செய்கின்றன. தமிழ்நாட்டு மக்களுக்கு விரைவான உட்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்குவதில் மத்திய அரசு தயாராகவும் உறுதியுடனும் இருக்கிறது. உரிய நேரங்களில் மாநில அரசின் ஒத்துழைப்பு வர வேண்டியது மட்டுமே அவசியம் ஆகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Union Minister Ashwini Vaishnav has said that the lack of cooperation from the state government is the reason for the delay in central government projects.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in