
தமிழக மீனவர் பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவரருமான எடப்பாடி பழனிசாமி.
கடந்த ஜன.25-ல் வங்கக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 33 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களின் படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியானது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளதாவது,
`25.1.2025 அன்று வங்கக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதும், மீனவர்களது படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்வதும், அவற்றை சேதப்படுத்துவதும் அதிகரித்துள்ளது.
மீனவர்கள் கைது செய்யப்பட்டவுடன், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவதுடன் வேலை முடிந்துவிட்டதாகக் கருதி அடுத்த வேலையை திமுக அரசு பார்க்கப் போய்விடுவதாக பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதையும், படகுகளை பறிமுதல் செய்வதை தடுக்கவும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் 39 எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மத்திய அரசும் காலம் தாழ்த்தாது உடனடியாக இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்றார்.