
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையவுள்ள இடத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய அரசின் புதிய விமான நிலையங்கள் கொள்கை 2008-ன் கீழ், தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 19, 2022-ல் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையவுள்ள இடத்துக்கு ஒப்புதல் கேட்டு விண்ணப்பித்தது.
பாதுகாப்பு அமைச்சகம், இந்திய விமானப்படை, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம், இந்திய விமான நிலைய ஆணையம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்துவிட்டு கடந்த ஜூலை 9-ல் டிட்கோ நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது மத்திய அரசு.
மேலும் புதிய விமான நிலையங்கள் கொள்கை 2008-ன் படி, விமான நிலையம் அமையவுள்ள இடத்தைக் கையகப்படுத்தவும், விமான நிலைய கட்டுமானத்துக்கு நிதி திரட்டவும், கட்டுமானத் திட்டத்தைச் செயல்படுத்தவும், டிட்கோ நிறுவனத்துக்கு முழு ஒப்புதலை அளித்துள்ளது மத்திய அரசு.
பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்துக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 13 கிராமங்களில் இருந்து மொத்தம் 5,369 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 90 % விவசாய நிலமாகும். இது வரை, 1,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை பிறப்பித்துள்ளது.
இந்தப் புதிய விமான நிலையத்தின் கட்டுமானத்துக்கு ரூ. 32,704 கோடி செலவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 10 கோடி விமானப் பயணிகளை கையாளும் அளவுக்கான வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ளது. 2026 ஜனவரியில் விமான நிலைய கட்டுமானம் தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பரந்தூரில் விமான நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் கடந்த 730 நாட்களாக போராடி வருகின்றனர்.