`எடப்பாடி பழனிசாமியை மத்திய அரசு ஒரு மனிதனாகக் கூட மதிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்த முடியாதவர்கள் கலைஞரின் விழா பற்றி பேச அருகதை இல்லை’ என்று திமுக எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் இல்லத் திருமண விழாவில் இன்று (ஆகஸ்ட் 19) பேசினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். திருமண விழாவில் ஸ்டாலின் பேசியவை பின்வருமாறு:
`ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வருகை தந்து கலைஞர் நினைவிடத்தை பார்க்க வேண்டும் என்று அவரே விருப்பப்பட்டார். முழுமையாக நினைவிடத்தைப் பார்த்துவிட்டு இதுபோல நான் எங்குமே பார்த்ததில்லை என்றார். நாணய வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று இந்த அரங்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் எழுந்து நின்று கலைஞருக்கு மரியாதை செலுத்துங்கள் என்றார்.
கூட்டணிக்கட்சியினர் பேசுவதைவிட அதிகமாக, திமுககாரர்கள் பேசுவதைவிட அதிகமாக, சிறப்பாக தலைவர் கலைஞரை பற்றிப் பேசினார் அமைச்சர் ராஜ்நாத் சிங். கலைஞரை இந்த அளவுக்கு பாராட்டிப் பேச வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை, அது அவருக்குத் தேவையும் இல்லை. ஆனால் அப்படிப் பேசினார் என்றால் அதை அவரது உள்ளத்தில் இருந்து பேசினார். இதை சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இங்கே தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒருவர் இருக்கிறார். அவர் நேற்று பேட்டியளித்தார். நாணயம் ஹிந்தியில் இருக்கிறது, தமிழில் இல்லை என்று கூறினார். ஒன்று அவருக்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டும் அல்லது நாட்டு நடப்பு புரிந்திருக்கவேண்டும், இல்லையென்றால் தலையில் மூளையாவது இருக்க வேண்டும்.
எம்.ஜி.ஆருக்கும், அண்ணாவுக்கும் நாணயம் வெளியிடப்பட்டது. அந்த நாணயத்தையெல்லாம் அவர் பார்த்திருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். ஏன் ராகுல் காந்தியை அழைக்கவில்லை என்று அவர் கேட்கிறார். நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றிய அரசின் நிகழ்ச்சியாக நடந்தது. கலைஞரின் நாணயத்தை வெளியிட்டது ஒன்றிய அரசு, எனவே ஒன்றிய அமைச்சர் அழைக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர் நாணய வெளியீட்டு விழாவை எடப்பாடி பழனிசாமி நடத்தினார். ஒன்றிய அமைச்சர்கள் வர மறுத்துவிட்ட காரணத்தால்தான் அவரே நாணயத்தை வெளியிட்டார். ஒன்றிய அரசு அவரை ஒரு முதல்வராக மதிக்கவில்லை. முதல்வராக அல்ல, ஒரு மனிதனாகக் கூட நினைக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்த முடியாதவர்கள் கலைஞரின் விழா பற்றி பேச அருகதை இல்லை’.