கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள்: மத்திய அரசு நிராகரிப்பு | Union Government | Coimbatore Madurai Metro |

கோவை மற்றும் மதுரையில் 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை இருப்பது காரணமாகச் சொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்.
Union Government rejected Metro Rail Plans for Madurai and Coimbatore
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாகத் தகவல்.
1 min read

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை அறிமுகம் செய்வதற்கானத் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இதுதொடர்புடைய விரிவான திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது.

தமிழ்நாடு அரசு கடந்தாண்டு பிப்ரவரியில் கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால், இந்தத் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் கடந்த நவம்பர் 14 தேதியிட்ட அறிவிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோவை நகரின் மக்கள்தொகை 15.84 லட்சம் மற்றும் மதுரை நகரின் மக்கள்தொகை 15 லட்சம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் கொள்கை 2017-ன்படி, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு திட்டம் வகுக்க நகரின் குறைந்தபட்ச மக்கள்தொகை 20 லட்சம் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். இதைக் காரணம் காட்டி கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், குறைந்த மக்கள்தொகை கொண்ட இரண்டாம் நிலை நகரங்கள் பலவற்றில் மெட்ரோ ரயில் சேவை இருப்பதாகவும் இதற்கெல்லாம் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் வாதிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

ஆக்ரா, பாட்னா, போபால் போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. ஆக்ராவின் மக்கள்தொகை 16 லட்சம். பாட்னாவின் மக்கள்தொகை 17 லட்சம். போபால் மக்கள்தொகை 18.8 லட்சம். இந்த நகரங்களிலும் 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகையே உள்ளன.

மேலும், மாநிலத்தின் தலைநகரல்லாத நகரங்களிலும் இதற்கு முன்பு மெட்ரோ ரயில் சேவைக்கு மத்திய அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் ஆக்ரா, கான்பூர் நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. மஹாராஷ்டிரத்தில் நாக்பூர் மற்றும் புனே நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் இந்தூரிலும் குஜராத்தில் சூரத்திலும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இவற்றின் அடிப்படையில் தமிழ்நாட்டில் கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் சேவை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்க வேண்டும் என்பது அனைவரது வாதமாக இருக்கிறது.

Summary

Union Government rejected Metro Rail Plans for Madurai and Coimbatore

Chennai Metro Rail | Metro Rail | Coimbatore Metro Rail | Madurai Metro Rail | Union Government | Coimbatore Madurai Metro |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in