
மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் ஏல உரிமையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது மத்திய சுரங்க அமைச்சகம்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தைச் சேர்ந்த அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ. வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கர் நிலத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் வகையில், வேதாந்தை குழுமத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்தது.
தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, டங்ஸ்டன் சுரங்க ஏல உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமமும் வழங்கக் கூடாது எனவும் மத்திய அரசை வலியுறுத்திக் கடந்த டிச.9-ல் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேறியது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தின் அரிட்டாப்பட்டி, அ. வல்லாளப்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி போன்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் குழுவுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் நேற்று (நவ.22) மத்திய சுரங்க அமைச்சர் கிஷண் ரெட்டியைச் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது, டங்ஸ்டன் சுரங்க ஏல ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி அவர்கள் மனு அளித்தனர். அப்போது அவர்களிடம், மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யும் வகையில் சாதகமான முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்தார் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, டங்ஸ்டன் சுரங்க ரத்து தொடர்பான அறிவிப்பு நாளை (ஜன.23) அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றார்.
இந்நிலையில், விரிவான ஆலோசனைக்குப் பிறகு அரிட்டாப்பட்டி பகுதியில் உள்ள பல்லுயிர் தளத்தின் முக்கியத்துவம் மற்றும் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய முடிவு அடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது மத்திய சுரங்க அமைச்சகம்.