மும்மொழி கொள்கையை ஏற்றால் நிதி என மத்திய அமைச்சர் தெரிவித்தார்: அன்பில் மகேஸ்

அப்படிச் செய்தால்தான் மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை வழங்குவோம் என அவர் வெளிப்படையாகக் கூறியது அதிர்ச்சியளித்தது.
மும்மொழி கொள்கையை ஏற்றால் நிதி என மத்திய அமைச்சர் தெரிவித்தார்: அன்பில் மகேஸ்
1 min read

`புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததாக’ பேட்டியளித்துள்ளார் தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ்.

தமிழக பொது நூலக இயக்ககத்தின் சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "பேரறிவுச் சிலை" வெள்ளி விழாக் கொண்டாட்டத்தை இன்று (டிச.23) தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து அன்பில் மகேஸ் பேசியவை பின்வருமாறு,

`திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் தமிழக எம்.பி.க்களுடன் மத்திய கல்வி அமைச்சரை சந்தித்தேன். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் அரை மணி நேரத்தில் நிதி ஒதுக்கப்படும் எனக் கூறினார். எங்கள் அணுகுமுறை பணிவான முறையில் இருந்தது. நம்முடைய செயல்பாடுகள் குறித்துப் பேசினோம்.

அதற்கு, நான் ஹிந்தி பேசாத ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவன், ஆனால் நானே இதை கூறுகிறேன் என்றார் அமைச்சர் தர்மேந்திர பிரதான். அவரிடம், எங்கள் மாநிலத்திற்கென்று சில உணர்வுகள் இருக்கின்றன, அண்ணா காலத்திலிருந்து நாங்கள் இருமொழிக் கொள்கையை பின்பற்றுகிறோம்.

எங்களுடைய செயல்பாடு சரியான முறையில் இல்லையென்றால் பரவாயில்லை. இந்திய அளவிலும், உலக அளவிலும் உள்ள பல முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த பிள்ளைகள் படிக்கின்றனர், தயவுகூர்ந்து அதை (பிற மாநிலங்களுடன்) ஒப்பிட்டுப் பாருங்கள் என்று கூறினேன்’ என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் இன்று (டிச.23) அளித்த பேட்டி பின்வருமாறு,

`தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தில்லிக்கு வந்து மத்திய கல்வி அமைச்சரை சந்தித்தபோது தமிழக எம்.பி.க்கள் பலரும் உடனிருந்தோம். தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கவேண்டுமென்றால் புதிய கல்விக்கொள்கையை நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் வெளிப்படையாகக் கூறினார். நீங்கள் தமிழ், ஆங்கிலத்துடன் ஹிந்தியையும் சேர்த்துக் கற்பியுங்கள் என்றார்.

உங்கள் தாய் மொழியை நீங்கள் கற்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் ஹிந்தியையும் சேர்த்துப் படிக்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார். அப்படிச் செய்தால்தான் மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை வழங்குவோம் என அவர் வெளிப்படையாகக் கூறியது அதிர்ச்சியளித்தது. இதை நாங்கள் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டிக் கண்டனம் தெரிவித்தோம்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in