கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு ரூ. 100 மதிப்பிலான நினைவு நாணயத்தை வெளியிட கடந்த ஜூலை 12-ல் அரசாணை பிறப்பித்தது மத்திய நிதியமைச்சகம்
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
1 min read

வரும் ஆகஸ்ட் 18-ல் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கும் தமிழக அரசு விழாவில், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா சமீபத்தில் நிறைவு பெற்றது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி கடந்த ஒரு வருடமாக தமிழக அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது. மேலும் `கலைஞர் மு. கருணாநிதி’ என்ற பெயரில் ரூ. 100 மதிப்பிலான நினைவு நாணயத்தை வெளியிட தமிழ்நாடு அரசு முன்வைத்த கோரிக்கையை ஏற்று கடந்த ஜூலை 12-ல் அரசாணை பிறப்பித்தது மத்திய நிதியமைச்சகம்.

இதை அடுத்து ரூ. 100 மதிப்பிலான நினைவு நாணயத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த நினைவு நாணயம் ஹைதராபாதில் உள்ள மத்திய அரசு அச்சகத்தில் தயாராகியுள்ளது. நாணயத்தின் ஒரு பக்கத்தில் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் `பிறந்தநாள் நூற்றாண்டு கலைஞர் மு. கருணாநிதி’ 1924-2024 என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் கலைஞர் கருணாநிதியின் புகைப்படமும், அதற்குக் கீழே `தமிழ் வெல்லும்’ என்று தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் மறுபக்கம் அசோக சின்னத்துடன் ரூ. 100 என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த நூற்றாண்டு நினைவு நாணயத்தை, வரும் ஆகஸ்ட் 18-ல் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கும் அரசு விழாவில், அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றுகிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in