ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடத்தப்படும்.
ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: முதல்வர் ஸ்டாலின்
1 min read

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு விழாவில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், குறைகளைத் தீர்க்க உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

"மக்களான உங்களின் குறைகளைத் தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே ஜூலை 15 தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடத்தப்படும். நகரப் பகுதிகளில் 3,768 முகாம்கள், கிராமப் பகுதிகளில் 6,232 முகாம்கள் என மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடைபெறவுள்ளன.

இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் எல்லாவற்றிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். நகரப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகள், திட்டங்கள் உங்களைத் தேடி வரும்! இதுவே கிராமப் பகுதிகளில் 14 அரசுத் துறைகளின் 46 சேவைகளை நீங்கள் பெறலாம்.

இதில் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள் இந்த முகாம்களில் உங்களின் விண்ணப்பங்களை நீங்கள் நிச்சயமாகத் தரலாம். இப்படி நீங்கள் தரும் விண்ணப்பங்கள் மேல் 45 நாள்களுக்குள் முடிவெடுக்கப்படும்! ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை இந்த முகாம்கள் நடக்கும்.

இத்தனை துறைகள், சேவைகள், திட்டங்கள்... இதில் எப்படி விண்ணப்பிப்பது? என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். உள்ளூர் அளவில் இதற்கான தன்னார்வலர்கள் உங்கள் வீடுதேடி வந்து, உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் பற்றி உங்களுக்கு விளக்குவார்கள். எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்ன சான்று, ஆவணங்கள் எல்லாம் இணைக்க வேண்டும்? தகுதி வரம்பு என்ன? இப்படி தேவையான எல்லா தகவல்களும், வழிகாட்டுதல்களும் உங்கள் வீட்டுக்கு வந்து கொடுப்பார்கள்" என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in