உதயநிதி
உதயநிதிANI

கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அமைச்சர் உதயநிதி வருகை

விஷச்சாராயம் குடித்த 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Published on

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

கருணாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் விஷச்சாராயம் குடித்து முதலில் உயிரிழந்துள்ளார். சுரேஷின் இறுதிச்சடங்கிற்குச் சென்றவர்களில் பலர் பாக்கெட் விஷச்சாராயம் குடித்து, அவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர். விஷச்சாராயம் குடித்த 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 39 நபர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக விஷச்சாராய வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சிபிசிஐடி அதிகாரி கோமதி சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் விஷச்சாராய சம்பவத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உட்பட பலரும் ஆறுதல் கூறி, அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.

உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர்கள் எ.வ. வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் உடன் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

மேலும், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுக்கான காசோலையை வழங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

logo
Kizhakku News
kizhakkunews.in