புத்தாண்டு விடுமுறை முடிந்தவுடன் மாணவர்களுக்கு அரசின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக ஊடகப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இப்போது ஏன் லேப்டாப் கொடுக்கிறீர்கள் என்ற கேள்வியை திடீர் 'கணினி நிபுணர்' எடப்பாடி பழனிசாமி எழுப்பி இருக்கிறார். இன்னும் சில வாரங்களில் நம் மாணவர்கள் கரங்களுக்கு மடிக்கணினிகள் சென்று சேரவுள்ள நிலையில், இந்தக் கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பியுள்ள நோக்கம் என்ன என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றாக தெரியும். தன்னுடைய குறுகிய அரசியல் லாபத்திற்காக, கல்லூரி மாணவர்கள் பயன்பெற இருக்கும் ஒரு திட்டத்துக்கு எதிராக அவதூறுகளை பரப்ப வேண்டும் என்பதே அவருடைய எண்ணம்.
ஏதோ தேர்தலுக்காக திடீரென லேப்டாப் கொடுக்கப்படுகிறது போன்ற ஒரு பொய் பிம்பத்தை ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி முயல்கிறார். 2025-2026 நிதிநிலை அறிக்கையில் லேப்டாப் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு, லேப்டாப் வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன.
அண்ணா பல்கலைக்கழகம், தேசிய தகவல் மையம் (என்.ஐ.சி.) , ஐஐடி மெட்ராஸ் மற்றும் தமிழ்நாடு அரசின் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவைக் கொண்டு மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கு உகந்த வகையில் தொழில்நுட்ப அம்சங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன.
எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில், "இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு இவர்கள் தரும் லேப்டாப் இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை," என்று சொல்லியிருக்கிறார்.
நான் இதுவரை எடப்பாடி பழனிசாமியை சேக்கிழார் எழுதிய கம்ப இராமாயணத்தைப் படித்த தமிழ்ப் புலவர் என்று மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் தமிழ்ப் புலவர் மட்டுமல்ல. அவர் சிறந்த கணினி நிபுணர் என்பதும் இப்போது தான் தெரிந்தது. அரசின் லேப்டாப் மாணவர்களின் கரங்களுக்கு இனி தான் சென்ற சேர இருக்கிறது. அதற்குள்ளாக, நம்முடைய ‘கணினி நிபுணர்’ எடப்பாடி பழனிசாமி, லேப்டாப்பில் தொழில்நுட்பம் போதவில்லை – கட்டமைப்பு சரி இல்லை என்று கதைவிடுகிறார். கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்றவாறு, அதிவேக பிராஸசர் மற்றும் நீண்டநேரம் தாங்கும் பேட்டரி என அத்தனை நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த லேப்டாப் இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுடன் சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, ஏஐ வசதி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. உலக அளவில் தரமான டெல், ஏசர், ஹெச்பி ஆகிய நிறுவனங்களிடம் இருந்து லேப்டாப்கள் நேரடியாக கொள்முதல் செய்து மாணவர்களுக்கு வழங்குகிறோம்.
இப்படி தரம், தொழில்நுட்பம், வசதி என அனைத்திலும் சிறப்பாக இருக்கக்கூடிய மடிக்கணினிகளை கல்லூரி மாணவர்களுக்கு நம் அரசு வழங்க இருக்கிறது. இவை படிப்படியாக மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு கல்லூரி மாணவர்கள் கிறிதுஸ்மஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வந்தவுடன் அவர்களுக்கு வழங்கப்படும். வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும்.
மத்திய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீடு, அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதி சுரண்டல் இவற்றையெல்லாம் திறம்பட எதிர்கொண்டு முதலமைச்சர் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளது. இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி ஏதேதோ கதைகளைச் சொல்கிறார்.
அவருடைய நோக்கம், எதையாவது சொல்லி இந்த திட்டத்தை தடுக்க முடியுமா என்பதுதான். அவருடைய எண்ணம் ஒருபோதும் பலிக்காது. எனவே, மாணவர்களுடைய கல்வி கனவை எப்படி சிதைக்கலாம் என்று சிந்திப்பதை விட்டுவிட்டு, எடப்பாடி பழனிசாமி வேறு ஏதாவது ஆக்கபூர்வமான அரசியல் பணிகளை செய்தால் நன்றாக இருக்கும். இல்லையெனில், தமிழ்நாட்டு மக்களும், மாணவர்களும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு நிச்சயம் உரிய பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Deputy Chief Minister Udhayanidhi Stalin has announced that laptops will be distributed to students once they return to college after the New Year holidays.