தமிழகத்தின் விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவியால் இன்று (செப்.29) தமிழகத்தின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.
1977-ல் பிறந்த உதயநிதி ஸ்டாலின், 2008-ல் நடிகர் விஜயின் குருவி படத்தைத் தயாரித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து 2016-ல் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டதன் மூலம் அரசியலில் மறைமுகமாக நுழைந்தார் உதயநிதி ஸ்டாலின்.
அதன் பிறகு, 2019 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தொடங்காததைக் குறிப்பிடும் வகையில், தமிழகம் முழுவதும் ஒற்றை செங்கலை வைத்து வாக்கு சேகரித்து பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றார் உதயநிதி ஸ்டாலின். இந்தத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், 38 தொகுதிகளை வென்றது திமுக கூட்டணி.
இதை அடுத்து, மு.க. ஸ்டாலின், மு.பெ. சாமிநாதன் ஆகியோருக்குப் பிறகு திமுகவின் 3-வது இளைஞரணிச் செயலாளராக 2019 ஜூலை 4-ல் பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்.
2021 தமிழக சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் தமிழகம் முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டார் உதயநிதி ஸ்டாலின். இந்தத் தேர்தலில் 159 தொகுதிகளைக் கைப்பற்றியது திமுக கூட்டணி. திமுக மட்டும் 133 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
இந்தத் தேர்தலில் சென்னையின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்.எல்.ஏ.வாகத் தேர்வானார் உதயநிதி ஸ்டாலின். ஆனால் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் அவர் இடம்பெறவில்லை.
இதைத் தொடர்ந்து, 14 டிசம்பர் 2022-ல் முதல்முறையாக தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள் ஆகியவை ஒதுக்கப்பட்டன.
2023-ல் சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பாஜகவைக் குறிவைக்கும் வகையில் `29 பைசா மோடி’ என்று விமர்சித்தார் உதயநிதி ஸ்டாலின்.
மத்திய அரசுக்கு தமிழகத்திலிருந்து வழங்கப்படும் 1 ரூபாய்க்கு, 29 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது என்ற வகையில் அமைந்திருந்தது இந்தப் பிரச்சாரம். இந்தத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் வென்றது திமுக கூட்டணி.
இதனைத் தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சியினால், தெற்கு ஆசியாவின் முதல் இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடத்தப்பட்டது. இதனை அடுத்து கேலோ இந்தியா போட்டிகளும் முதல் முறையாக சென்னையில் நடத்தப்பட்டன.
46 வயதான உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழகத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். மேலும், தமிழக அமைச்சரவை மாற்றத்தில், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை உதயநிதி ஸ்டாலினுக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.