இபிஎஸ் பற்றி உதயநிதி கூறியது உண்மை தான்: டிடிவி தினகரன் | TTV Dhinakaran |

"எங்களை அழித்துக்கொண்டு தற்கொலை முயற்சிக்கு சமமான முயற்சியை நாங்கள் உறுதியாக எடுக்க மாட்டோம்."
இபிஎஸ் பற்றி உதயநிதி கூறியது உண்மை தான்: டிடிவி தினகரன் | TTV Dhinakaran |
2 min read

எடப்பாடி பழனிசாமி குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியது உண்மைதான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் செப்டம்பர் 9 அன்று ஆலோசனை நடத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமி குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "நான் முழு மனத்துடன் சொல்கிறேன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களே, நீங்கள் 100 ஆண்டு காலம் நல்ல உடல் நலத்தோடும் மன நலத்தோடும் வாழ வேண்டும். அதிமுகவுக்கு நிரந்தர பொதுச்செயலாளராக நீங்கள்தான் இருக்க வேண்டும். அதுதான் நீங்கள் தமிழ்நாட்டுக்குச் செய்ய முடிந்த நல்லது. உங்களால்தான் அந்த இயக்கத்தை வழிநடத்த முடியும். அந்தத் தகுதி உங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. அப்போதுதான் எங்கள் வேலை சுலபமாகும். இதை அதிமுகவினர் ஒத்துக் கொள்வார்களா எனத் தெரியவில்லை. ஆனால் நான் முன்மொழிகிறேன். நீங்கள்தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக இருக்க வேண்டும்" எனக் கூறினார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் கூறியது உண்மை தான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது:

"அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறவரை, அது திமுகவுக்கு வெற்றியைத் தரும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உண்மையைக் கூறியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் வஞ்சப் புகழ்ச்சியாகச் சொல்லியிருந்தாலும், உண்மை அதுதான். உறுதியாக பழனிசாமி என்கிற சுயநலமிக்க துரோகச் சிந்தனை உள்ள மனிதர் இருக்கும் வரை அதிமுகவின் பொதுச்செயலாளராக அவர் இருக்கும் வரை, அதிமுக ஆட்சிக்கு வராது.

அதிமுகவின் தலைமையை அவர் ஏற்ற பிறகு, 2019, 2021, 2024 ஆகிய தேர்தல்களில் இரட்டை இலை சின்னம் இருந்தும் தொண்டர்கள் பலம் இருந்தும் படைபலம் இருந்தும் அதிமுக தோல்விகளைச் சந்தித்து வருவதற்கு நாங்கள் காரணமல்ல. எடப்பாடி பழனிசாமி தான் காரணம். அங்கே இருப்பவர்கள் இதை உணர வேண்டும். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என விரும்புபவர்கள் நல்ல அரசியல் அனுபவம் உடையவர்கள். அவர்களை இதை நன்கு உணர வேண்டும்.

அமமுக எதற்குத் தொடங்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். எங்களை அழித்துக்கொண்டு தற்கொலை முயற்சிக்கு சமமான முயற்சியை நாங்கள் உறுதியாக எடுக்க மாட்டோம். எங்கள் வழியில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தேர்தல் நெருக்கத்தில் எங்களுக்கான கூட்டணிகளை நாங்கள் முடிவு செய்கிற இடத்தில் சுதந்திரமாக இருக்கிறது அமமுக.

கூட்டணி பலத்தை எல்லாம் தாண்டி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக இருப்பதுதான் திமுக வெற்றி பெறுவதற்குக் காரணம். எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்று துணை முதல்வர் சொல்வதிலிருந்து 2019 தேர்தல் முதல் திமுக கூட்டணியின் வெற்றிக்குக் காரணம் பழனிசாமி என்கிற சுயநல துரோக சிந்தனை உள்ள நயவஞ்சக மனிதர்தான் என்பது தெளிவாக எல்லாருக்கும் தெரிந்திருக்கும்" என்றார் டிடிவி தினகரன்.

TTV Dhinakaran | ADMK | AIADMK | Udhayanidhi Stalin |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in