
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 19-ல் துணை முதல்வர் ஆகவுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கோவையில் இன்று தொடக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்ற 3.28 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்படவுள்ளது.
ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் இந்தத் திட்டத்தைத் தொடக்கிவைத்தார். தொடக்க விழாவில் பேசிய அவர், தனது உரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் எனக் குறிப்பிட வந்தார். உடனடியாக நிறுத்திக்கொண்டு மன்னிப்புக் கேட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன், ஆகஸ்ட் 19-ல் தான் வருகிறார், அதற்கு முன்னதாக அப்படி சொல்லக் கூடாது என்று சிறு விளக்கமளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று தனது உரையைத் தொடர்ந்தார்.
ஏற்கெனவே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பதவியேற்கவுள்ளதாகப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள, இதற்கு முன்னதாகவே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.
அண்மையில் கொளத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிறாரா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை வலுத்திருக்கிறது, ஆனால் பழுக்கவில்லை என்று பதிலளித்தார்.
இந்த நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது உரையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எனக் குறிப்பிட முற்பட்டுள்ளது, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவது வெகுதொலைவில் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.