
எடப்பாடி பழனிசாமிக்கு எம்ஜிஆரின் முகம் மறந்து போய்விட்டது. அனைவரது முகமும் அமித் ஷாவின் முகம் போலவே தெரிகிறது என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திண்டுக்கல்லில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
”திண்டுக்கல் மாவட்டத்தில் திரளான மக்கள் உற்சாகமாக வரவேற்றார்கள். இன்று இந்த நிகழ்ச்சிக்காக எனது வாகனத்தில் இருந்து இறங்கி அரங்கத்திற்கு வரும்போதும் உங்களது உற்சாகத்தையும் எழுச்சியையும் பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். முழுதாக மேடைக்கு வந்துவிடுவேனா என்று சந்தேக்கப்பட்டேன். என்னுடைய கையுடன் நான் வந்துவிடுவேனா என்று யோசித்தேன். ஆனால், ஒன்றைத் தெரிந்துகொண்டேன். என்றைக்கும் கை நம்மை விட்டுப் போகாது. நான் என் கைகளைச் சொன்னேன். உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையையும் சேர்த்து சொல்கிறேன்.
திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும். தமிழகத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று பாசிசத்தைச் சேர்ந்தவர்கள் முயல்கிறார்கள். அதையெல்லாம் தவிடுபொடியாக்க வேண்டிய பொறுப்பு திமுகவினருக்கு இருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பேருந்தை எடுத்துகொண்டு ஒவ்வொரு தொகுதியாகச் செல்கிறார். அவருக்கு எம்ஜிஆர் முகமே மறந்துபோய்விட்டது. ஜெயலலிதாவைத்தான் மறந்தார்கள் என்று நினைத்தால் எம்ஜிஆரையும் மறந்துவிட்டார்கள். சமீபத்தில் நீலகிரியில் அவரது நிகழ்ச்சியின்போது எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்திருக்கிறேன் என்று மைக்கில் பேசுகிறார். கீழிருந்து தொண்டர்கள் அது எம்ஜிஆர் சிலை என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.
அந்த அளவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு யாரைப் பார்த்தாலும் இப்போது அமித் ஷாவின் முகமாகவே தெரிகிறது. அந்த அளவுக்கு உரிமையாளர்களிடம் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்” என்றார்.
முன்னதாக அக்டோபர் 8 அன்று திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "எடப்பாடி பழனிசாமி, கடந்த 3 மாதங்களுக்கு முன் பிரசாரத்திற்குக் கிளம்பினார். அப்போது பேருந்து முழுவதும் கூட்டம் இருந்தது. பாதி பிரசாரத்தை முடித்துவிட்டார், இப்போது பாதி கூட்டம்தான் இருக்கிறது. பிரசாரத்தை முடிக்கும்போது அவரும் ஓட்டுநரும் மட்டும்தான் தனியாக வருவார்கள்.
இன்று தமிழ்நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்று அதிமுகவின் துணையோடு பாஜக வந்து கொண்டிருக்கிறது. பழைய அடிமை எடப்பாடி பழனிசாமி போதாது என்று புதிய அடிமையைத் தமிழ்நாட்டில் பாஜக தேடிக் கொண்டிருக்கிறது. நான் யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்கே தெரியும். புதிய அடிமைகளுக்காக வலை வீசித் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அடிமைகள் கூட சிக்கலாம். ஆனால் திமுக இருக்கும்வரை தமிழகத்தில் காலடி வைக்க அல்ல, தொட்டுக்கூடப் பார்க்க முடியாது” என்று பேசினார்.