
சனாதன தர்மம் குறித்த பவன் கல்யாணின் பேச்சுக்கு பொறுத்திருந்து பார்க்கலாம் என உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
திருப்பதி லட்டு விவகாரம் பூதாகரமானதிலிருந்து ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் சனாதன தர்மம் குறித்து அழுத்தமாகப் பேசி வருகிறார். திருப்பதி ஏழுமலையானுக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி பிராயச்சித்த விரதத்தை மேற்கொண்டார். தொடர்ந்து 11 நாள்கள் விரதம் இருந்த அவர் அலிபரி பாதையில் நடந்து திருமலையைச் சென்றடைந்தார். நேற்று காலை வாராஹி நம்பிக்கை பத்திரத்தை ஏழுமலையான பாதங்களில் வைத்து சிறப்புப் பூஜை செய்தார். தொடர்ந்து, வாராஹி பொதுக்கூட்ட நிகழ்ச்சியிலும் உரையாடினார்.
இதனிடையே, சென்னையில் கடந்தாண்டு நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு மலேரியாவைப்போல சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசினார். இவருடையப் பேச்சுக்கு எதிராக உத்தரப் பிரதேசம், கர்நாடகம், பிஹார், மகாராஷ்டிரம் என பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
வாராஹி பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், உதயநிதி ஸ்டாலினின் பெயரைக் குறிப்பிடாமல் சனாதனம் குறித்த அவருடையப் பேச்சை விமர்சிக்கும் வகையில் பேசினார். இந்தப் பகுதியை பவன் கல்யாண் தமிழில் பேசினார்.
"இங்கு நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். அதனால் தமிழில் சொல்கிறேன். சனாதன தர்மம் ஒரு வைரஸை போன்றது, அதை ஒழிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் சொல்கிறார். இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதை யார் சொல்லியிருந்தாலும், அவர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்களால் சனாதனத்தை ஒழிக்க முடியாது. சனாதன தர்மத்தை ஒழிக்க யாரேனும் முயற்சித்தால், நீங்கள் அழிந்துபோவீர்கள்" என்று பவன் கல்யாண் கூறினார்.
இந்த நிலையில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வியெழுப்பினார்கள். இதற்கு, "சரி, பொறுத்திருந்து பார்க்கலாம்" என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.