விஜய் மாநாடு குறித்து பதில் சொல்ல விரும்பவில்லை: உதயநிதி ஸ்டாலின்
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் பேசிய கருத்து குறித்து பதில் சொல்ல விரும்பவில்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலுள்ள வி. சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சிக் கொள்கைகளை அறிவித்த கட்சித் தலைவர் விஜய், கொள்கை எதிரியாக பிளவுவாத அரசியலையும் அரசியல் எதிரியாக திராவிட மாடல் ஆட்சியையும் முன்வைத்தார்.
விஜயின் மாநாடு குறித்து செய்தியாளர்கள் முன்பு எழுப்பிய கேள்விக்கு, மாநாட்டில் பேசியதை தான் இன்னும் பார்க்கவில்லை என்றும் பார்த்த பிறகு அதுபற்றி கருத்து தெரிவிப்பதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று மாலை உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் மீண்டும் விஜயின் மாநாடு குறித்து கேள்வியெழுப்பினார்கள். இதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "எங்களுடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அனைத்துக்கும் பதில் சொல்லிவிட்டார். அதற்கு மேல் பதில் சொல்ல விரும்பவில்லை" என்றார்.
முன்னதாக, விஜயின் மாநாடு மற்றும் விஜய் வைத்த விமர்சனங்கள் பற்றி ஆர்.எஸ். பாரதி கூறுகையில், "திமுக என்பது ஓர் ஆலமரம். காய்த்த மரம்தான் கல்லடிபடும். விமர்சனங்களை எதிர்கொள்ளும் சக்தி எங்களிடம் உள்ளது. திராவிட மாடல் பற்றி ஆளுநர் முதல் நிறைய பேர் பேசியிருக்கிறார்கள். யாருக்கும் வார்த்தைக்கு வார்த்தை பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. திமுக என்பது தேம்ஸ் நதியைப் போன்றது" என்றார்.