சனாதனத்தை ஒழிப்பது குறித்து பேசியது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
சென்னை காமராஜர் அரங்கில் இரு ஆண்டுகளுக்கு முன்பு, சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் மலேரியா, டெங்கு, கொரோனாவைப் போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.
உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதிலுமிருந்து கண்டனங்கள் வலுத்தன. பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து இன்று விளக்கம் கொடுத்துள்ளார்.
சமூக ஊடகச் சவால்கள் என்ற தலைப்பில் தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு கடந்த 3 நாள்களாகப் பயிற்சி பட்டறை நடைபெற்று வந்தது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழா நடைபெற்றது. பொய்ச் செய்திகளை வீழ்த்த, விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார்.
இதே உரையில் சனாதனம் குறித்து தான் பேசியது பேசுபொருளானது பற்றியும் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
"கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னாள், நான் ஒரு நிகழ்ச்சியில் பேசினேன். பிறப்பால் ஏற்றத்தாழ்வு சொல்கின்ற எந்த விஷயத்தையும் அழிக்கணும் எனப் பேசினேன். உடனே, என் பேச்சைத் திரித்து, நான் சொல்லாத விஷயங்களையும் சொன்னேன் என ஒரு கும்பல் நாடு முழுக்கப் பரப்பிவிட்டார்கள்.
அதற்காக, என் தலையைச் சீவினால் ரூ. 10 லட்சம் தருகிறேன் என ஒரு சாமியார் சொன்னார். மற்ற மாநிலங்கள் போல தமிழ்நாடு எதையும் உடனே நம்பாது.
ஏன் என்றால், இது தந்தை பெரியாரால் பண்படுத்தப்பட்ட மண். தந்தை பெரியார் ஒரு விஷயத்தை யார் சொன்னாலும், ஏன் நானே சொன்னாலும் உடனே நம்பாத, 'உன் பகுத்தறிவுக்கும் - புத்திக்கும் அது சரி என்று பட்டால் மட்டுமே ஏத்துக்க. இல்லை என்றால், ஏன், எதற்கு என்று கேள்வி கேளு' என்று சொன்னவர் தான் நம் தந்தை பெரியார் அவர்கள்.
அந்த வழியில், தவறான தகவல்களைத் தடுப்பதுடன், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் முதல்வரின் வழிகாட்டுதலோடு, அரசு சார்பில் ஒரு பிரத்யேக உண்மையைச் சரிபார்க்கும் பிரிவு தொடங்கப்பட்டது" என்றார் அவர்.
Udhayanidhi Stalin | Sanatana Dharma |