திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழியின் 60-வது பிறந்தநாள் விழாவுக்கு முன்னறிவிப்பு இல்லாமல் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் பேசியவை பின்வருமாறு:
`இந்த வழியாகச் செல்லும்போது அருள்மொழி அக்காவின் 60-வது பிறந்தநாள் விழா நடைபெறுவதாக என்னிடம் தெரிவித்தனர். எனவே அக்காவுக்கு வாழ்த்து தெரிவிக்கவேண்டும் என்று உரிமையுடன் இங்கே வந்திருக்கிறேன். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலைஞரின் மூத்த பிள்ளை, செல்லப் பிள்ளை என்று அழைக்கப்படுகிற முரசொலி நாளிதழில், திமுக இளைஞரணியின் சார்பில் திராவிட போராளிகள் என்ற தொடரை அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். அதற்கு இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய பணி சிறக்கவேண்டும். இப்போது இருக்கும் சூழலில் மேலும் பல அருள்மொழிகள் தேவைப்படுகிறார்கள். மீண்டும் அவருக்கு என் வாழ்த்துக்கள்’ என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய அருள்மொழி, `இந்த நிகழ்வில் எனக்கு இரண்டு இன்ப அதிர்ச்சிகள். ஒன்று அன்புக்குரிய தம்பி அமைச்சர் உதயநிதி பிற அமைச்சர்களுடன் இங்கு வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இரண்டாவது, மூன்று நாட்களுக்கு முன்பு முடிவான இந்த நிகழ்ச்சிக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து என் மூத்த அண்ணன் மகிழ்நன் வந்திருக்கிறார்.
அண்ணனும், தம்பியும் எதிர்பாராமல் இங்கு வந்து எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். எங்கள் தந்தைக்கு நிகரான தமிழன்பன் வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்’ என்றார்.