தமிழக அமைச்சரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பொறுப்பு வகித்து வந்த உதயநிதி ஸ்டாலினை, கடந்த செப்.29-ல் துணை முதல்வராக நியமித்து உத்தரவிட்டார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி. அதே நாளில் ஆர். ராஜேந்திரன், வி. செந்தில் பாலாஜி, கோவி. செழியன், சா.மு. நாசர் உள்ளிட்டோர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள் ஆகியவற்றை கவனித்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சரவை மாற்றத்தில் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் பொதுத்துறை புதிய அமைச்சரவைப் பட்டியலை நேற்று (செப்.30) வெளியிட்டது.
இதில், முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்து 2-வது இடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும், 3-வது இடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் எந்த வரிசையில் அமைச்சர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதோ, அதே வரிசையில்தான் சட்டப்பேரவையிலும் இடம் ஒதுக்கப்படும். இதன்படி அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்தாக சட்டப்பேரவையில் அமர உள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயலராக, கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது. அந்தப் பதவிக்கு தற்போதைய தமிழக உயர் கல்வித்துறைச் செயலர் பிரதீப் யாதவ் நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.