திமுக இளைஞரணிச் செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நாளை பதவியேற்கிறார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பை ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டது.
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்படுவது குறித்த தகவல் நீண்ட நாள்களாகவே வலம் வந்துகொண்டிருந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலினின் அமெரிக்கப் பயணத்துக்கு முன்பு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருந்தபோதிலும், அமெரிக்கப் பயணத்துக்கு முன்பு இதுகுறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பியதிலிருந்து, உதயநிதி ஸ்டாலின் எந்த நேரத்திலும் துணை முதல்வராக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே கருதப்பட்டு வந்தது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவது குறித்த கேள்விக்கு, "உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது, இன்னும் பழுக்கவில்லை" என்றும் "ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும்" என்றும் இருமுறை பதிலளித்தார் முதல்வர் ஸ்டாலின்.
இதனிடையே, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சிறையிலிருந்த செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பும் விரைவில் வெளியாகலாம் என்றும் தீர்ப்பு செந்தில் பாலாஜிக்கு சாதகமாகவே அமையலாம் என்றும் எதிர்பார்ப்புகள் இருந்தன. எனவே, செந்தில் பாலாஜியின் வருகைக்குப் பிறகு, அவரையும் அமைச்சரவையில் இணைக்கும் வகையில் அமைச்சரவை மாற்றம் செய்ய காத்திருப்பதாகத் தகவல்கள் கசிந்தன.
இதேபோல, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும், அவர் அமைச்சராகத் தொடர எந்த நிபந்தனையும் உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்படவில்லை. இதன்படி, செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து நேற்று முன்தினம் வெளியே வந்தார்.
இந்த நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 5-வது முறையாக அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது.
எதிர்பார்த்ததைப்போல, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிறார். செந்தில் பாலாஜி அமைச்சரவையில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி தவிர கோவி. செழியன் (புதுமுகம்), ஆர். ராஜேந்திரன் (புதுமுகம்), ஆவடி நாசர் ஆகியோர் அமைச்சரவையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளார்கள்.
பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சுற்றுலாத் துறை அமைச்சர் கே. ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்ட கே. ராமச்சந்திரன் அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலாகா மாற்றம்
பொன்முடி - உயர்கல்வித் துறை (முன்பு) - வனத் துறை (தற்போது)
மெய்யநாதன் - சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் (முன்பு) - பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை (தற்போது)
கயல்விழி செல்வராஜ் - ஆதி திராவிடர் நலத் துறை (முன்பு) - மனிதவள மேம்பாட்டுத் துறை (தற்போது)
மதிவேந்தன் - வனத் துறை (முன்பு) - ஆதி திராவிடர் நலத் துறை (தற்போது)
ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் - பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை (முன்பு) - காதி மற்றும் பால்வளத் துறை (தற்போது)
தங்கம் தென்னரசு - நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை (முன்பு) - நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் (தற்போது)
புதிய அமைச்சர்கள் நாளை பிற்பகல் 3.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார்கள். ஆளுநர் ஆர்.என். ரவி இவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.