துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்: புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

துணை முதல்வர் பதவி குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. துணை முதல்வருக்கு என பிரத்யேகமாக எந்த அதிகாரமும் கிடையாது
துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்: புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
1 min read

தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட நிலையில், புதிய தமிழக அமைச்சர்கள் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்றனர்.

தமிழகத்தின் புதிய துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை நியமித்தார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி. இந்நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த அரசு விழாவில் தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக ஆர். ராஜேந்திரன், வி. செந்தில் பாலாஜி, கோவி. செழியன், சா.மு. நாசர் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவியேற்புப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

புதிய அமைச்சர்களாகப் பதவியேற்ற ஆர். ராஜேந்திரனுக்கு சுற்றுலாத் துறையும், வி. செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையும், கோவி. செழியனுக்கு உயர்கல்வித்துறையும், சா.மு. நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் 3-வது துணை முதல்வராகியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதற்கு முன்பு 2006 முதல் 2011 வரை, கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின்போது துணை முதல்வர் பதவி வகித்தார் மு.க. ஸ்டாலின். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2017 முதல் 2021 வரை, துணை முதல்வர் பதவி வகித்தார் ஓ. பன்னீர்செல்வம்.

துணை முதல்வர் பதவி குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. துணை முதல்வருக்கு என பிரத்யேகமாக எந்த அதிகாரமும் கிடையாது. அமைச்சர்களுக்கான சலுகைகளும், அதிகாரங்களும் மட்டுமே துணை முதல்வருக்கும் இருக்கும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in