
கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஜிப்லைன் கோளாறால் இரு பெண்கள் சிக்கித் தவித்தது பேசுபொருளாகியுள்ளது.
சென்னை கதீட்ரல் சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் அக்டோபர் 7-ல் திறந்து வைத்தார். அக்டோபர் 8 முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்தப் பூங்காவில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், பார்வையாளர்களைப் படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், 50 மீட்டர் ஜிப்லைன், தொடர் கொடி வளைவுப் பாதை, 120 அடி நீளம் உடைய பனிமூட்டப் பாதை, 2600 சதுர அடி பரப்பிலான ஆர்க்கிட் குடில், 10,000 சதுர அடி பரப்பிலான கண்ணாடி மாளிகை, வெளிநாட்டுப் பறவையகம், மர வீடு, பசுமை குகை, இசை நீரூற்று, பாரம்பரிய காய்கறித் தோட்டம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பூங்கா நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 100 மற்றும் சிறியவர்களுக்கு ரூ. 50 நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சிறப்பு அம்சங்களைப் பார்வையிட தனித்தனியாக கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அத்துடன் புகைப்படக் கருவிகளுக்கு ரூ. 100, வீடியோ கேமராக்களுக்கு ரூ. 5,000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பூங்காவில் ஜிப்லைனில் எதிர்பாராத விதமாக கோளாறு ஏற்பட்டது. இதனால், இரு பெண்கள் சிக்கித் தவித்தார்கள். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு கயிறு மூலம் இருவரும் கீழிறக்கப்பட்டதாகத் தெரிகிறது. பூங்கா திறந்து 5 நாள்களே ஆனதால், இந்த சம்பவம் பேசுபொருளானது.
எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளப் பக்கத்தில் இதை விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.
"விடியா திமுக முதல்வர், தனது தந்தை திரு. கருணாநிதி பெயரில் சென்னையில் பூங்கா திறந்த வெறும் ஐந்தே நாட்களில், பூங்காவில் உள்ள ஜிப்லைன் (Zipline) பழுதடைந்து, அதில் பயணித்த இரு பெண்கள் 20 நிமிடங்கள் சிக்கி, அந்தரத்திலேயே இருந்து, பின் கயிறு மூலமாக கீழிறக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
அரசுப் பூங்கா; புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு, கலெக்ஷன்-கரப்ஷன்-கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட விடியா திமுக அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.
திரு. கருணாநிதி பெயரிலான இந்த பூங்காவிற்குள் நுழையவே நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அது போக, ஜிப்லைனுக்கு 250 ரூபாய் என அதில் உள்ள வசதி ஒவ்வொன்றிற்கும் தனி கட்டணம் வசூல் செய்கிறது விடியா திமுக அரசு. இந்த பூங்காவை முழுவதும் சுற்றிப்பார்க்க 650 ரூபாய் ஆகிறது. தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக இந்த திரு.கருணாநிதி பூங்காவிற்கு வசூலிக்கிறது விடியா திமுக அரசு.
பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.