
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, நாதக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன, இதன் மூலம் அங்கே இருமுனைப் போட்டி உறுதியாகியுள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை ஒட்டி காலியான ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தன.
திமுக வேட்பாளராக அக்கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகுமாரும், நாதக சார்பில் மா.கி. சீதாலட்சுமியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஜன.10-ம் தேதி தொடங்கி நேற்று (ஜன.17) நிறைவுபெற்ற வேட்புமனுத்தாக்கலின் முடிவில் 58 வேட்பாளர்கள், 65 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காகத் தாக்கல் செய்யப்பட்ட 65 வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. இதில், திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
இதன் மூலம், ஈரோடு கிழக்கில் இருமுனைப் போட்டி உறுதியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக 55 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. அத்துடன் 3 சுயேட்சைகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெற வரும் ஜன.20 கடைசி தினமாகும்.
ஜன.20 மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்படும். தேர்தல் பரப்புரையின் இறுதி நாள் பிப்ரவரி 3 ஆகும். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 5-ல் வாக்குப்பதிவும், பிப்ரவரி 8-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.