இருமொழிக் கொள்கை காலாவதியானது: அண்ணாமலை

திமுகவினரின் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சிபிஎஸ்இ மும்மொழி பாடத்திட்டம்தான். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை?
இருமொழிக் கொள்கை காலாவதியானது: அண்ணாமலை
ANI
1 min read

1960-களில் காலாவதியான இருமொழிக் கொள்கையை, குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் வரை சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு நிதி விடுவிக்கப்படாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரப் பிரதேசத்தில் நேற்று கூறினார். இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை நிதி கிடையாது என்ற மிரட்டல் விடுக்கும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார்.

முதல்வரின் பதிவைப் பகிர்ந்து, இருமொழிக் கொள்கை காலாவதியானது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்புடைய அண்ணாமலையின் எக்ஸ் தளப் பதிவு:

"முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில், மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா?

தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சிபிஎஸ்இ மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்?

தற்போது 2025 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்?" என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in