ஹெச்எம்பி வைரஸ் புதிதல்ல, அச்சம் வேண்டாம்: தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் சென்னையில் ஒருவருக்கும் சேலத்தில் ஒருவருக்கும் ஹெச்எம்பிவி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹெச்எம்பி வைரஸ் புதிதல்ல, அச்சம் வேண்டாம்: தமிழ்நாடு அரசு
1 min read

ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று புதிதல்ல, அச்சம் கொள்ளத் தேவையில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"ஹியூமன் மெடாநிமோவைரஸ் (ஹெச்எம்பிவி), புதிய வைரஸ் அல்ல. 2001-ல் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் ஏற்கெனவே பரவலில் உள்ளது. ஹெச்எம்பிவி பாதிப்பு தாமாகவே சரியாகக் கூடியது. தேவையான அளவு நீர்ச்சத்து மற்றும் ஓய்வு உள்பட நோய்க்கான அறிகுறிகளுக்கு ஏற்ப பார்த்துக்கொண்டாலே போதுமானது.

தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் சென்னையில் ஒருவருக்கும் சேலத்தில் ஒருவருக்கும் ஹெச்எம்பிவி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடைய உடல்நிலை சீராக உள்ளது. இருவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் பொதுவான சுவாசப் பிரச்னைக்கான வைரல் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை.

ஜனவரி 6 அன்று மத்திய சுகாதாரத் துறைச் செயலர் தலைமையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சகம் சார்பில் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் காணொளி வாயிலாக ஆலோசனை நடைபெற்றது. கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் தமிழ்நாட்டிலிருந்து சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் இதில் கலந்துகொண்டார்கள். ஹெச்எம்பிவி குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

ஹெச்எம்பிவியிலிருந்து பாதுகாத்துக் கொள்வது என்பது இருமல் மற்றும் தும்மலின்போது வாய் மற்றும் மூக்கை மறைத்தல், கைகளைக் கழுவுதல், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக் கவசத்தை அணிதல், தேவைப்பட்டால் சுகாதாரத் துறை அமைப்பிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். மற்ற சுவாசத் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முறையிலேயே இதிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஹெச்எம்பிவி தொற்று என்பது தாமாகவே சரியாகக்கூடிய, சமாளிக்கக்கூடிய ஒன்று தான் என்பது மக்களிடம் மீண்டும் தெளிவுபடுத்தப்படுகிறது. அச்சம் கொள்ளத் தேவையில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in