கீழடி ஆதாரங்களை மறைத்து, தமிழர் நாகரிகத்தையும் வரலாற்றையும் மூடி மறைக்க முயலும் ஒன்றிய பாஜக அரசு, சோழர்களின் பெருமையைப் பேசுவது கபட நாடகமின்றி வேறென்ன என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில்கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா மத்திய கலாசாரத் துறை சார்பில் ஜூலை 23-ல் தொடங்கி ஜூலை 27-ல் நிறைவடைந்தது.
இந்த விழாவின் நிறைவு நாளான ஞாயிறன்று, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
பிரதமர் மோடி உரையாற்றியதாவது:
"சோழப் பேரரசை இந்தியாவின் பொற்காலங்களின் ஒன்றாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஜனநாயகத்தின் தாய் இந்தியா என்ற பாரம்பரியத்தை சோழப் பேரரசு முன்னெடுத்துச் சென்றது.
மக்களாட்சிக்கு பிரிட்டனின் மேக்னா கார்டா குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் பேசுவார்கள். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சோழப் பேரரசில் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
படையெடுத்த பிறகு மன்னர்கள் தங்கம், வெள்ளி போன்றவற்றைக் கைப்பற்றிக்கொண்டு வருவார்கள் எனக் கேட்டிருக்கிறோம். ஆனால், ராஜேந்திர சோழன் கங்கை நீரைக் கொண்டு வந்தார்.
நம் பாரம்பரியத்தின் மீது பெருமித உணர்வை முன்னெடுக்கும் வேளையில், இங்கு மேலும் ஓர் உறுதிப்பாட்டை மேற்கொள்கிறேன். வரவிருக்கும் காலங்களில் தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன், அவருடைய மைந்தன் மகத்தான ஆட்சியாளர் முதலாம் ராஜேந்திர சோழனுடைய பிரமாதமான உருவச் சிலை அமைக்கப்படும்" என்றார் பிரதமர் மோடி.
இந்நிலையில், முப்பெரும் விழாவை மத்திய அரசு எடுத்து நடத்தியது குறித்தும் பிரதமர் மோடி உரையாற்றியது குறித்தும் திமுக அரசு மீதும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விமர்சனங்களை வைத்துள்ளார்.
"சோழப் பேரரசர்களுக்கான உரிய மரியாதையை திமுக அரசு முன்பே அளித்திருந்தால், தமிழர்களுக்கு எதிராக இருக்கும் ஒன்றிய பாஜக அரசு இதைக் கையிலெடுத்திருக்காது. சோழப் பேரரசின் பெருமையைக் கொண்டாட வேண்டியது தங்கள் கடமை என்பதை மறந்து, தமிழர்களின் பெருமையை ஒன்றிய பாஜக கையில் அடகு வைத்துள்ளது திமுக அரசு. கீழடியில் கிடைத்த ஆதாரங்களை மறைத்து, தமிழர் நாகரிகத்தையும் வரலாற்றையும் மூடி மறைக்க முயலும் ஒன்றிய பாஜக அரசு, சோழர்களின் பெருமையைப் பேசுவது கபட நாடகமின்றி வேறென்ன? நாம் இப்படிச் சொல்வது, மறைமுகமாக ஓரணியில் இணைந்து இருக்கும் இவ்விரு கபடதாரிகளுக்கும், மக்களுக்குத் தவெக உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறதே என்ற வகையில் எரிச்சல் ஏற்படலாம். அதற்கு என்ன செய்ய? உண்மை ஒருநாள் அம்பலமாகத்தானே செய்யும்" என்று விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
PM Modi | TVK Vijay | Vijay | DMK | Gangaikonda Cholapuram | Rajendra Cholan |