எதையும் பேசக்கூடிய மனநிலையில் இல்லை: ஆதவ் அர்ஜுனா | Aadhav Arjuna | Karur Stampede |

"கூடிய விரைவில் அவர்களைச் சந்திப்போம். அவர்களுடன் மிகப் பெரிய பயணம் தொடரும்..."
கோப்புப்படம்
கோப்புப்படம்படம்: https://x.com/AadhavArjuna
1 min read

விஜயின் கரூர் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தான் எதையும் பேசக்கூடிய மனநிலையில் இல்லை என தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் கடந்த சனிக்கிழமை இரவு மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டத்தை மேற்கொண்டார். பிரசாரத்தின்போது, கூட்டநெரிசல் ஏற்பட பலருக்கு மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக இதுவரை மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளார்கள். பிரசாரத்தை முடித்துக்கொண்டு அன்றிரவே விஜய் சென்னை திரும்பினார்.

இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் அருணா ஜெகதீசன் விசாரணையை நடத்தி வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக இதயம் நொறுங்கிப் போய் இருப்பதாகப் பதிவிட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 20 லட்சம் நிதியுதவி அறிவித்தார். இதன்பிறகு, விஜய் சார்பில் அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. காணொளி எதையும் அவர் வெளியிடவில்லை.

தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, " இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன். 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்!'" என்று எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பிறகு, இரவில் சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவிட்டு நீக்கிவிட்டார். இதுதொடர்பாக காவல் துறை ஆய்வு செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, எதையும் பேசக்கூடிய மனநிலையில் இல்லை என்றார்.

"என் வாழ்க்கையிலேயே எனது அம்மாவின் இழப்புக்குப் பிறகு, எனது 41 குடும்பங்கள் மிகப் பெரிய இழப்பைச் சந்தித்திருப்பது வலியைக் கொடுத்திருக்கிறது. இப்போதைக்கு நான் எதையும் பேசக்கூடிய மனநிலையில் இல்லை. கூடிய விரைவில் அவர்களைச் சந்திப்போம். அவர்களுடன் மிகப் பெரிய பயணம் தொடரும்" என்றார் ஆதவ் அர்ஜுனா.

Aadhav Arjuna | Karur | Karur Stampede | TVK Vijay | TVK | Vijay |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in