
தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 21 வரை மாற்றி அமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவரும் நடிகருமான விஜய் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். சனிக்கிழமை தோறும் பரப்புரை செய்துவரும் விஜய், முதற்கட்டமாக திருச்சி மற்றும் அரியலூரில் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தார்.
அதற்கு அடுத்த சனிக்கிழமை நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். முன்னதாக நாள் ஒன்றுக்கு விஜய் 3 மாவட்டங்களில் பிரசாரம் செய்வதாகத் திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால், பரப்புரையின்போது ஆயிரக் கணக்கில் தொண்டர்கள் திரள்வதால் ஒவ்வொரு இடத்திலும் குறிப்பிடப்பட்ட நேரத்தைக் கடந்து கால தாமதம் ஆகி வருகிறது. இதனால் சமீபத்தில் ஒரு நாளைக்கு இரண்டு மாவட்டங்களில் மட்டுமே விஜய் பரப்புரை செய்வார் என்று தவெக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பரப்புரை திட்டத்தில் மாற்றங்கள் செய்து அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 27 அன்று நாமக்கல் மற்றும் கரூர், அக்டோபர் 5-ல் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை, அக்டோபர் 11-ல் கடலூர் மற்றும் பாண்டிச்சேரி, அக்டோபர் 18 அன்று தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி, அக்டோபர் 25-ல் ஈரோடு மற்றும் திருப்பூர்.
நவம்பர் 1-ல் பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி, நவம்பர் 8 அன்று கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர், நவம்பர் 15-ல் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை, நவம்பர் 22-ல் சேலம் மற்றும் தருமபுரி, நவம்பர் 29 அன்று தஞ்சை மற்றும் மயிலாடுதுறை.
டிசம்பர் 7 அன்று புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல், டிசம்பர் 13-ல் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம், டிசம்பர் 20 அன்று காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்.
அடுத்த ஆண்டு ஜனவரி 24 அன்று மதுரை மற்றும் தேனி, 31-ல் கன்னியாகுமரி.
பிப்ரவரி 7 அன்று தென்காசி மற்றும் விருதுநகர், பிப்ரவரி 14-ல் கோவை மற்றும் நீலகிரி, பிப்ரவரி 21 அன்று செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் அடுத்த பரப்புரை நாமக்கல்லில் நிகழவுள்ள நிலையில், அதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அனுமதி கோரப்பட்ட கே.சி. தியேட்டர் பகுதியிலேயே விஜய் பரப்புரை செய்ய காவல்துறை அனுமதி அளித்துள்ளதாகக் கூறினார்.