வேலு நாச்சியார், காமராஜர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் ஆகிய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களின் சிலைகளை பனையூரிலுள்ள கட்சி அலுவலகத்தில் விஜய் இன்று திறந்து வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்படுவதாக விஜய் அறிவித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதை முன்னிட்டு பனையூரிலுள்ள கட்சி அலுவலகத்தில் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது.
விழாவில் பங்கேற்பதற்காக கட்சி அலுவலகத்துக்கு வந்த விஜய், அலுவலகத்தின் வெளியே இருந்த தொண்டர்களை நோக்கி கைகளை அசைத்து உள்ளே சென்றார். முதலில் கட்சிக் கொடியை ஏற்றினார் விஜய்.
கட்சியின் கொள்கைத் தலைவர்களாக அறிவிக்கப்பட்ட வேலு நாச்சியார், காமராஜர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு அலுவலக வளாகத்தில் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிலைகளைத் திறந்துவைத்த விஜய், தலைவர்களின் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கம் குறித்து கட்சித் தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
"மக்கள் இயக்கமாக, மக்களுக்கான நலத்திட்டங்களைச் செய்து வந்த நாம், அரசியல் களத்தைக் கையாளத் தொடங்கி, இதோ இப்போது இரண்டாம் வருடத்தின் வாயிலில்.
ஓராண்டுக்குள் எத்தனை எதிர்ப்புகளை, ஏகடியங்களைக் கடந்திருப்போம்? எதற்கும் அஞ்சாமல் எதைக் கண்டும் பதறாமல் நம் கருத்திலும் கருத்தியலிலும் நின்று நிதானித்து, நேர்மையாக நடைபோட்டு வருகிறோம்.
இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவைக் கொண்டாடும் பொருட்டு, தமிழகமெங்கும் மக்கள் நலத்திட்டப் பணிகளை நம் தோழர்கள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
வேறு யாரையும் போல வாயாடலில் மட்டுமே மக்களுடன் நிற்காமல், உள்ளத்தில் இருக்கும் உண்மையான உணர்வுடன் மக்களுடன் களத்தில் நிற்பதுதான் நாம் செய்ய வேண்டிய ஒரே பணி.
ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை 2026 தேர்தலில் நாம் உருவாக்கிக் காட்டுவோம். நம்மோடு இணைந்து மக்களும் மனதளவில் அதற்குத் தயாராகி வருகிறார்கள்" என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.