
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஆகஸ்ட் 15 முதல் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக 100 இடங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தப் பயணத்தைத் தஞ்சாவூரில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். விஜய் பெரும்பாலும் அறிக்கை வாயிலாகவே தனது கருத்துகளை வெளிப்படுத்தி வந்தார். கடந்தாண்டு அக்டோபரில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டில் நீண்ட நேரம் உரையாற்றினார். இது தவிர மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் உரையாற்றுகிறார். கட்சியின் முதல் பொதுக்குழுக் கூட்டம், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா, இரண்டாம் ஆண்டு தொடக்க விழா என விரல்விட்டு எண்ணும் அளவிலேயே அவர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசினார். பேச்சு மூலம் கொள்கைகளை நிலைப்பாட்டை விமர்சனங்களை வெளிப்படுத்தியதை விட அறிக்கைகள் வாயிலாகவே இதைச் செய்தது அதிகம்.
கட்சியை ஆரம்பித்து ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார் விஜய். கடந்தாண்டு டிசம்பரில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்து மனு அளித்தார் விஜய். அப்போது ஆளுநரைச் சந்தித்துவிட்டு திரும்பியபோது, ஆளுநர் மாளிகை வெளியே செய்தியாளர்கள் காத்திருந்தார்கள். அப்போதும் செய்தியாளர்களைச் சந்திக்காமல் கடந்து சென்றார்.
ஜனநாயகன் படப்படிப்புக்காக கொடைக்கானல் சென்றபோது, மதுரை விமான நிலையத்தில் கடந்த மே மாதம் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஆனால், ரசிகர்களுக்குச் சொல்ல வேண்டிய செய்தியை மட்டும் கூறிவிட்டு செய்தியாளர்களின் கேள்விகளைக் கடந்து சென்றார் விஜய்.
ஃபெஞ்சல் புயலால் சென்னை டி.பி. சத்திரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களின் இடங்களுக்குச் செல்லாமல் பனையூரிலிருந்தபடியே பாதிக்கப்பட்ட மக்களவை வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கியது விமர்சனத்துக்குள்ளானது. வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வேலை பார்க்கலாம், அரசியல் செய்ய முடியாது என கேலிகளும் வந்தன.
இந்த விமர்சனங்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் விதமாக, பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்துப் போராடும் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கடந்த ஜனவரியில் நேரடியாக பரந்தூர்குப் பறந்தார் விஜய். அங்கு வீனஸ் திருமண மண்டவ வளாகத்தில் வேனில் நின்றபடி உரையாற்றினார். அரசியல் கட்சியைத் தொடங்கிய பிறகு விஜய் நேரடியாகக் களத்துக்குச் சென்று மக்களைச் சந்தித்தது இதுவே முதன்முறை. பரந்தூர் மண்ணிலிருந்து தன் கள அரசியல் பயணத்தைத் தொடங்குவதாக விஜய் அன்று அறிவித்தார். பரந்தூருக்குப் பிறகு, இஃப்தார் விருந்தில் கலந்துகொண்டார் விஜய்.
இவற்றுக்கு மத்தியில் விஜய் விரைவில் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி வந்த வண்ணம் இருந்தன. ஜூலையில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது ஆகஸ்ட் 15 முதல் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 100 இடங்களில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தஞ்சாவூரிலிருந்து பயணத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஜன நாயகன் படப்பிடிப்பு நிறைவடைந்ததால், விஜயின் முழுக் கவனமும் அரசியல் நோக்கி திரும்பியுள்ளதாகத் தெரிகிறது. விவசாயிகளைக் குறிவைத்து டெல்டா பகுதியிலிருந்து இப்பயணத்தைத் தொடங்க விஜய் நினைத்திருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பேரணியில் விஜய் முதன்முதலாகப் பேசியது நாகப்பட்டினத்தில். இதை மனதில் வைத்துக்கொண்டே இம்முறையும் டெல்டா பகுதி தேர்வு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.