புதிய எதிரிகள் என்று பெயர் சொல்லாமல் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததைக் காண முடிந்தது. பழையன கழிதலும் புதியன புகுதலும்தானே பழந்தமிழ் மரபு? என்று நடிகர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியலில் களமிறங்கியுள்ள தவெக தலைவரும் நடிகருமான விஜய் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். இதற்கிடையில் விஜய்யை விமர்சிக்கும் விதமாக முதல்வர் திமுக தொண்டர்களுக்கு நேற்று (செப். 13) கடிதம் ஒன்றை எழுதினார். அதில் பல்வேறு விமர்சனங்களை அவர் வைத்திருந்த நிலையில், விஜய் அதற்குப் பதிலளித்துள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது -
”நமது மதுரை மாநாட்டில் அறிவித்ததைப் போலவே, 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நான் வரேன்" என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் நேற்று (13.09.2025) தொடங்கினோம். எளிதாகக் கடந்துவிடும் தூரத்தைக்கூட மக்கள் கடலில் பல மணிநேரம் நீந்தியே கடக்க வேண்டிய சூழல் இருந்தது என்பதை நாடும் நன்றாகவே உணர்ந்தது. இதையே நமது கொள்கை மற்றும் அரசியல் எதிரிகளும் இன்னும் ஆழமாக உணர்ந்திருப்பர்.
'விஜய் வெளியே வரவே மாட்டான். மக்களைச் சந்திக்கவே மாட்டான்' என்று ஆள் வைத்துக் கதையாடல் செய்தோர். இப்போது வெவ்வேறு விதங்களில் புலம்பத் தொடங்கி உள்ளனர். இதை முன்கூட்டியே ஒப்புக்கொள்வது போலத்தான் தங்களது கதறலை முப்பெரும் விழா என்கிற கடிதம் ஒன்றின் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தனர். புதிய எதிரிகள் என்று பெயர் சொல்லாமல் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. பழையன கழிதலும் புதியன புகுதலும்தானே பழந்தமிழ் மரபு? இன்னும் என்னென்னவோ வெறுப்பையும் விரக்தியையும் கக்கும் வார்த்தைகள் அக்கடிதத்தில் அழுதுகொண்டிருந்தன.
வெளியே கொள்கை. கொள்கை என்று பேசுவதும் உள்ளுக்குள்ளே பாஜகவோடு உறவாடுவதும் யார் என்று மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர். எனவே, கொள்கைக் கூப்பாடு போட்டு ஏமாற்றிக்கொண்டே கொள்ளை அடிப்போர் யார் என்று தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன? பொய் வாக்குறுதிகளை அள்ளி அள்ளித் தெளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டு, கேள்வி கேட்டுத் தங்களது உரிமைகளுக்காகப் போராட வரும் அதே சாமானிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுபவர் யார் என்றும் தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன?
தமிழகம் தாண்டியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உருவாகி இருக்கும் தன்னெழுச்சியான புத்தெழுச்சி, இப்போது அவர்களை ஏகத்துக்கும் குமுற வைத்துள்ளது. பொதுமக்களுக்கு இவர்கள் செய்யும் இடையூறுகள் அனைத்தையும் பற்றி, மக்களே கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். இடையறாமல் ஊறுகள் செய்வதையே கொள்கையாகக் கொண்ட இதயமற்ற இந்தத் தி.மு.க.விற்கு, கொள்கை, கோட்பாடுகளோடு மக்கள் விரும்பும் இயக்கம் ஒன்று எப்போது வந்தாலும் அதன் மீது கொள்கையற்ற கூட்டம் என்ற நமைச்சலையும் குமைச்சலையும் கொட்டுவது ஒன்றும் புதிதில்லை தானே? 2026 சட்டமன்றத் தேர்தலில் 1967. 1977 தேர்தல்களில் நிகழ்ந்ததைப் போல மாபெரும் வெற்றி விளைவை மக்கள் சக்தியின் பேராதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் நிகழ்த்திக் காட்டும்”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Vijay | TVK Vijay | MK Stalin | TN Politics |